சவுதி அரேபியாவில் ஒட்டக அழகு போட்டி- ஆபரேஷன் செய்து அழகை மாற்றியது கண்டுபிடிப்பு…!!
உலக அழகி முதல் உள்ளூர் அழகிப்போட்டி வரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒட்டக அழகு போட்டி பற்றி அறிந்து இருக்கிறீர்களா? இந்த போட்டி சவுதி அரேபியா நாட்டில் தான் நடந்து வருகிறது.
இந்த நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள ரியாத் பாலைவனத்தில் ஆண்டுதோறும் ஒட்டகத்திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி அழகான ஒட்டகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த போட்டியில் பங்கேற்கும் ஒட்டகங்கள் அதன் உண்மைத்தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இந்த விதிகளை மீறி போடெக்ஸ் என்ற ஊசி போட்டு ஒட்டகங்களின் உதடு மற்றும் கூம்பு பகுதியை அறுவை சிகிச்சை செய்தும் அழகுசாதன பொருட்களை பயன்படுத்தி ஒட்டகத்தின் அழகை மெருகூட்டியும் மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன.
இந்த ஆண்டு நடந்த ஒட்டக அழகு போட்டியில் இதுபோன்ற முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து 43 ஒட்டகங்களை தகுதி நீக்கம் செய்து போட்டியாளர்கள் நடவடிக்கை எடுத்தனர். வரும் காலங்களில் விதிகளை மீறும் ஒட்டக உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.