தெருநாய்களுக்கு உணவளித்த பெண்ணிற்கு ரூ.8 லட்சம் அபராதம்…!!
நவிமும்பையில் உள்ள என்.ஆர்.ஐ. ஹவுசிங் காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் 40 குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பை சேர்ந்த பெண் அன்சு சிங். இவர் தெருநாய்களுக்கு கட்டிட வளாகத்தில் உணவளித்து வந்தார். இதனால் காம்ப்ளக்ஸ் நிர்வாகம் அப்பெண்ணை நாய்களுக்கு உணவு வழங்க தடை விதித்தது. ஆனால் அன்சு சிங் இந்த தடையை மீறி உணவளித்து வந்தார்.
இதனால் கட்டிட வளாகத்தில் உணவளித்த குற்றத்துக்காக ஹவுசிங் காம்ப்ளக்ஸ் நிர்வாகம் நாள்தோறும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் விதிக்கப்பட்ட அபாரதம் ரூ.8 லட்சம் வரையில் எட்டி இருப்பதாகவும், இது சட்டவிரோதமானது என அன்சு சிங் குற்றம்சாட்டி உள்ளார்.
இதே போல மற்றொரு பெண்ணும் தெருநாய்களுக்கு உணவளித்ததாக ரூ.6 லட்சம் வரையில் அபராதம் விதித்தது.
இது பற்றி ஹவுசிங் காம்ப்ளக்ஸ் செயலாளர் வினிதா ஸ்ரீநந்தன், “கட்டிடத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களால் குழந்தைகள், முதியவர்கள் நடமாட அச்சம் ஏற்பட்டு வருகிறது. இந்த நாய்களால் வாகன நிறுத்துமிடம் மற்றும் பிற பகுதிகளில் அசுத்தம் செய்து வருவதால் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. நாய்கள் இரவில் ஊளையிடுவதால் குடியிருப்பு வாசிகளுக்கு தூக்கம் கெட்டு வருகிறது. இதனை தடுக்கவே அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது” என்றார்.