அமெரிக்காவில் தடுப்பூசி போட தயக்கம்: 20 ஆயிரம் படை வீரர்களை நீக்க நடவடிக்கை …!!
அமெரிக்க வல்லரசு நாடு கொரோனா தொற்றால் பெரும் பாதிப்புக்கு ஆளானது. அங்கு இதுவரை அந்த தொற்றால் சுமார் 5 கோடியே 5 லட்சத்து 13 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்து 3,500-க்கும் மேற்பட்டோர் இறந்தும் உள்ளனர். தற்போது அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனாலும் அங்கு தடுப்பூசி போடுவதில் பொதுமக்களிடம் மட்டுமல்லாமல் படைவீரர்கள் மத்தியிலும் தயக்கம் காணப்படுகிறது.
அங்கு 20 ஆயிரம் படைவீரர்கள் தடுப்பூசி போட மறுத்து விட்டனர். அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிற அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடற்படை வீரர்கள் 103 பேர் தடுப்பூசி போடாததால் படையில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். 2,700 பேர் கண்டிக்கப்பட்டுள்ளனர். மேலும் பணி நீக்க நடவடிக்கைகள் ஜனவரியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க விமானப்படையில் 27 பேர் தடுப்பூசி போடாத நிலையில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று படைத்தளபதிகள் பல மாதங்களாக கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.