ஒமைக்ரான் பரவல் எதிரொலி – குழந்தைகளுக்கும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் பிரதமர் வலியுறுத்தல்…!!
தென் ஆப்பிரிக்கா, மலாய் உள்பட பல நாடுகளில் இருந்து இஸ்ரேல் வந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 7 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பலருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் இஸ்ரேல் அரசு நோய் பரவாமல் இருக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டவுடன், முதலில் எல்லைகளை மூடிய நாடுகளில் இஸ்ரேல் நாடும் ஒன்று. இஸ்ரேல் நாட்டினர் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வர தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், இஸ்ரேலில் குழந்தைகளுக்கும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் நப்தாலி பென்னட் நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றுகையில் கூறியதாவது:
இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் ஐந்தாவது அலை தொடங்கி உள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைந்து காணப்படுகிறது. குழந்தைகளுக்கான தடுப்பூசி பாதுகாப்பானது. வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்ற ஒவ்வொரு பெற்றோரும் அவர்களது குழந்தைகளுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலில் 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கடந்த மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.