யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபையின் 2022 ம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிப்பு!! (வீடியோ)
யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபையின் 2 ஆயிரத்து 22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் பிரதேச சபையின் விசேட அமர்வு இன்றையதினம் தவிசாளர் மயிலன் அப்புத்துரை தலைமையில் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது தவிசாளரினால் 2 ஆயிரத்து 22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாக சமர்ப்பிக்கப்பட்டது.
11 உறுப்பினர்களைக்கொண்ட காரைநகர் பிரதேச சபையில், குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு சுயேச்சை குழுவின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 2 உறுப்பினர் என 5 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள அதே வேளை,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினர் என 6 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் 1 மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தடவைகள் காரைநகர் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தொற்கடிக்கப்பட்டுள்ளதால் தவிசாளரும் தனது பதவியை இழந்துள்ளார்.
இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற வேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த காரைநகர் பிரதேச சபையின் ஆட்சியை அப்போதய தவிசாளர் உயிரிழந்ததால் கடந்த மாதம் 10 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உதவியுடன் ஆதரவுடன் சுயேச்சைக் குழுவின் வசமானது.
பின்னர் புதிய தவிசாளரினால் 2 ஆயிரத்து 22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 8 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
வரவு செலவுத் திட்டம் தேற்கடிக்கப்பட்டமையினால் திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் இன்றையதினம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”