வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி….!!
தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் நோய்த்தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், சர்வதேச பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியா வரும் சர்வதேசப் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, நோய்த் தொற்று பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே வீட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் 7 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
அதன்படி செக்குடியரசு, சிங்கப்பூர், ஸ்வீடனில் இருந்து கோவை வந்த தம்பதி உள்பட 4 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து லண்டன், ஜெர்மனியில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் நோய்த் தொற்று பாதிப்பு குறித்து கண்டறிவதற்காக 6 பேரின் சளி மாதிரிகள் சென்னையிலுள்ள பொது சுகாதாரத்துறை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதில் சிங்கப்பூர் பயணிக்கு மட்டுமே ஒமைக்ரான் நோய்த் தொற்று பாதிப்பில்லை என்ற முடிவு கிடைத்துள்ளது. மற்ற 5 பேரின் முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது:-
கோவை மாவட்டத்துக்கு இதுவரை 3, 891 சர்வதேசப் பயணிகள் பல்வேறு விமான நிலையங்கள் மூலம் வந்துள்ளனர். இவர்களில் 6 பேருக்கு 8-வது நாள் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைவருக்கும் பெரிய அளவில் எந்தவித அறிகுறிகளும் இல்லை. இருந்தும் ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தி, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றனர்.