ரூ.280 கோடியை பதுக்கிய ‘சென்ட்’ வியாபாரி அதிரடி கைது…!!!
ஒட்டுமொத்த நாட்டையே ‘ஆ’வென வாய்பிளக்க வைத்த வருமானவரி சோதனை கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
உத்தரபிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த சென்ட் வியாபாரி பியூஷ் ஜெயினுக்கு சொந்தமாக கான்பூர், மராட்டியத்தின் மும்பை மற்றும் குஜராத்தில் உள்ள இல்லங்கள், அலுவலகங்கள், குடோன்களில் ஒரே நேரத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் படை சோதனையில் இறங்கியது.
அப்போது ஒரு பணச் சுரங்கத்துக்குள் புகுந்துவிட்டபோது போல கட்டுக் கட்டாக பணம் கிட்டியது. பல எந்திரங்கள் உதவியுடன் இரவும் பகலும் பணத்தை எண்ணினாலும், எண்ணி முடிப்பதற்குள் அதிகாரிகள் ‘டயர்டாகி’ போயினர். பெட்டி பெட்டியாக பணத்தை அடுக்கி, கன்டெய்னரில் துணை ராணுவ பாதுகாப்புடன் எடுத்துச் சென்றர்.
சுமார் ரூ.150 கோடி ரொக்கம் சிக்கியதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவித்தாலும், அது கிடுகிடுவென எகிறி, தற்போது ரூ.280 கோடியை எட்டியுள்ளது. வருமானவரி ஏய்ப்பு, ஜி.எஸ்.டி. கணக்கு முறைகேட்டின் மூலம் இப்படி மலையென கரன்சியை குவித்து அதன் ‘மணத்தில்’ திளைத்துள்ளார் சென்ட் வியாபாரி.
ஆமதாபாத் ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவு டி.ஜி. தெரிவித்த தகவல்படி, வருமானவரி சோதனையின்போது முதல்கட்டமாக ரூ.187.45 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. பிற்பாடு பறிமுதலான பணத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.280 கோடி ரொக்கத்தொகை பிடிபட்டுள்ளது. வருமானவரித் துறை வரலாற்றிலேயே இந்த அளவு ரொக்கத்தொகை பிடிபடுவது இதுவே முதல்முறை. மேலும், 25 கிலோ தங்கம், 250 கிலோ வெள்ளி, ரூ.6 கோடி மதிப்புள்ள 600 கிலோ சந்தன எண்ணெய் மற்றும் பெருமளவிலான மூலப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன. சோதனையின் தொடக்கத்தில் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்த பியூஷ் ஜெயின், தொலைபேசியில் திரும்பத் திரும்ப அழைத்த பிறகு திரும்பி வந்துள்ளார். நேற்று முன்தினம் சென்ட் வியாபாரி பியூஷ் ஜெயின் முறைப்படி கைது செய்யப்பட்டார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின்போது பியூஷ் ஜெயின், கைப்பற்றப்பட்ட பணமெல்லாம் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் சொந்தமானவை என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு உரிய சான்றுகளை அவரால் காட்ட முடியவில்லை. அவர் சுட்டிக்காட்டிய உறவினர்களும் அதை மறுத்துவிட்டனர்.
‘இவ்வளவு பெரிய பணக்குவியல் எப்படி வந்தது, அது எதற்காக பயன்படுத்தப்பட இருந்தது என்று நாங்கள் விசாரித்து வருகிறோம். கான்பூர் அனந்த்புரி இல்லத்தில் மட்டும் ரூ.177.45 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த இல்லம், வாசனைத் திரவிய விற்பனை வசூல் மையமாக செயல்பட்டதா அல்லது வேறு எதற்கும் பயன்படுத்தப்பட்டதா என்று விசாரிக்கிறோம். விசாரணை முடிவில்தான் அனைத்து விவரங்களும் தெரியவரும்’ என்று வருமானவரித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்ட் வியாபாரி பியூஷ் ஜெயின் மருத்துவ, கொரோனா பரிசோதனைக்குப் பின் கான்பூரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், குறிப்பிட்ட சென்ட் வியாபாரி சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் பணம் ஏழைகளுக்கு சொந்தமானது. அது எப்படி கொள்ளை அடிக்கப்பட்டது என்ற சான்றும் கிடைத்துள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
வருமானவரித் துறையின் தொடர் விசாரணையில் மேலும் பல அதிரடித் தகவல்கள் வெளியாகும். அவை, தேர்தலை எதிர்கொள்ளும் உத்தரபிரதேசத்தில் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.