பிறந்த குழந்தை இறந்து விட்டதாக நினைத்து காட்டுப்பகுதியில் விட்டு வந்த இளம்பெண்…!!
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி சோபனா தம்பதி. இவர்களுக்கு காயத்ரி (வயது 20) என்ற மகள் உள்ளார்.
வீராசாமி கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு தனியாக பிரிந்து சென்று விட்டார். சோபனா தனது மகள் காயத்ரியை வளர்த்து வந்தார்.
பிழைப்புக்காக மகள் காயத்ரியை அழைத்துக் கொண்டு கடந்த 5 வருடங்களாக ஊட்டி அருகிலுள்ள தனியார் டீ எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்தார். காயத்ரி அங்குள்ள கல்லூரியில் பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார்.
காயத்ரி வசிக்கும் பகுதியில் பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தை சேர்ந்த பாண்டியன் வசித்து வந்துள்ளார். இவரது மகன் ராஜதுரை (22). காயத்ரிக்கும் ராஜதுரைக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இதில் நெருங்கி பழகியதில் காயத்ரி கர்ப்பம் அடைந்தார். மேலும் தான் கர்ப்பமானதை யாருக்கும் தெரியாமல் மறைத்துள்ளார்.
நாளடைவில் வயிறு பெரிதாகியதால் காயத்ரியின் தாயார் ஷோபனா காரணம் கேட்டார். அப்போது தனக்கு வயிற்று வலி இருப்பதாகவும் வயிறு சரியில்லை என்றும் காரணம் கூறியுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காயத்ரியின் சொந்த ஊரான எசனை கிராமத்திற்கு கல்வி உதவித்தொகை பெறவும், போஸ்ட் ஆபீசில் பணம் எடுக்கவும் ஷோபனாவும் காயத்ரியும் வந்தனர்.
நேற்று இரவு 11 மணி அளவில் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக தாயிடம் கூறிவிட்டு, அருகிலுள்ள காட்டிற்கு காயத்ரி சென்றார். மலைக்குன்றின் பகுதியில் காயத்ரிக்கு பெண் குழந்தை பிறந்தது.
வெளியில் சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வராததால் சந்தேகம் அடைந்த தாய் ஷோபனா அங்கு சென்று பார்த்த போது காயத்ரிக்கு குழந்தை பிறந்து இருப்பது தெரியவந்தது. குழந்தை இறந்து விட்டதாக கருதி அங்கேயே போட்டு விட்டு வீட்டுக்கு வந்து விட்டனர்.
இதற்கிடையே காயத்ரிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை பிறந்து 3 மணி நேரம் தான் ஆகியிருக்கும் என சந்தேகப்பட்டு பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பெரம்பலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் சோபாவை அழைத்துக் கொண்டு குழந்தை பிறந்த இடத்திற்கு செல்லும் பொழுது அங்கு குழந்தை அழுதவாறு கிடந்துள்ளது. உடனே குழந்தையை மீட்டு பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் ஒப்படைத்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயத்ரியும், அவரது குழந்தையும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.