;
Athirady Tamil News

25 ஆண்டுகளைக் கடந்த தூர்தர்ஷன் கோபுரம் இன்றுடன் பயணத்தை முடித்துக் கொண்டது!! (படங்கள்)

0

இராமேஸ்வரத்தின் அடையாளங்களில் ஒன்றான, 25 ஆண்டுகளைக் கடந்த தூர்தர்ஷன் தொலைக்காட்சி , தொலைத்தொடர்பு கோபுரம் , டிசம்பர் 31ஆம் திகதியாகிய இன்றைய தினம் முதல் தனது பணியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறது.

இந்தியாவில் இருந்து இலங்கையின் ஒலிபரப்பு தொடர்புகளுக்காக கட்டப்பட்ட இந்த தொலைகாட்சி தொலைத்தொடர்பு கோபுரம் சுமார் 1060 அடி உயரம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைகாட்சி தொலைத்தொடர்பு கோபுரமாகும்.

ஐந்தரை கோடி இந்தியன் ரூபாய் நிதியில் , கடந்த 1990-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் கட்டப்பட்டது. 1060 அடி உயரத்தில் கட்டப்பட்ட இந்த உயர் கோபுரத்தில் 285 மீட்டர் உயரத்திற்கு சீமெந்து கற்களால் கட்டப்பட்டு, அதன் உச்சி பகுதியில் 45 மீட்டர் உயரத்தில் இரும்பு கம்பிகளால் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த தூர்தர்ஷன் தொலைத்தொடர்பு கோபுரம் சுமார் ரூ.6 கோடி செலவில் ட்ரோன் மூலம் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.

1995-ஆம் ஆண்டு முதல் இராமேஸ்வரத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை மற்றும் டெல்லியில் உள்ள தூர்தர்ஷன் நிலையத்திலிருந்து ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பெற்று ராமேஸ்வரத்தில் உள்ள தொலைக்காட்சி நிலையம் மூலம் ஒளிபரப்பப்பட்டு வந்தது.

இந்த தொலைக்காட்சி நிலையத்தில் அகில இந்திய வானொலி சேவைகளும் செயல்பட்டு வருகிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையானது, யாழ்ப்பாணம் மன்னார் உள்ளிட்ட பல பகுதிகள் வரை கிடைத்தது. மேலும் ராமேஸ்வரம் தீவு பகுதி மீனவர்களுக்கு இந்த தொலைக்காட்சி நிலைய உயர் கோபுரம் மீன் பிடித்து கரை திரும்பும் போது ஒரு கலங்கரை விளக்கம் போன்று பயனுள்ளதாக இருந்து வந்தது.

தற்போது வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வளர்ச்சியால் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நிகழ்ச்சியை மக்கள் பார்ப்பது குறைந்து விட்டது. இதனால் இந்தியாவிலுள்ள 412 தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையங்களை மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் சுமார் 30 ஆயிரம் ஊழியர்கள் பணி இழந்து உள்ளனர். தூர்தர்ஷன் நிலையங்களில் தரைவழி ஒளிபரப்பு நிறுத்தப்பட்ட நிலையில், பிரசார் பாரதி நிறுவனம் தற்போது நடைமுறையில் உள்ள அனலாக் டிரான்ஸ்மீட்டர் தொழில்நுட்பத்தை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தூர்தர்ஷனின் அனைத்து ஒளிபரப்புகளும் டி.டி.எச் சேவை மூலம் தொடர்ந்து கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் பொதிகை சேனல்களை இனிமேல் இதில் பார்க்கலாம்.

இராமேஸ்வரம் தூர்தர்ஷன் தொலைகாட்சி தொலைத்தொடர்பு கோபுரம் இரண்டரை ஏக்கர் இடத்தில் அமைந்துள்ள இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு கோபுரம்.

உலகளவில் 32-வது ரேங்கில் இருந்தது. திருநெல்வேலி, தென்கரைக்கோட்டை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, கொடைக்கானல் ஆகிய தூர்தர்ஷன் நிலையங்கள் அக்டோபர் 31 அன்று தனது சேவையை நிறுத்திக் கொண்டது.

இதன் மூலம் சுமார் 30 ஆயிரம் ஊழியர்கள் பணி இழந்து உள்ளனர். 25 ஆண்டுகள் பயணித்த இராமேஸ்வரம் தொலைகாட்சி தொலைத்தொடர்பு கோபுரம் தனது தரைவழி ஒளிபரப்பை இன்றுடன் முடித்துக் கொண்டாலும், வேறொரு பரிணாமங்களில் பயணித்துக் கொண்டே இருக்கிறது.

நன்றி :- விகடன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.