கற்பிட்டியில் 1,800 கிலோ உலர்ந்த மஞ்சள் மீட்பு!!
கற்பிட்டி கப்பலடி பகுதியில் 1,800 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி வன்னி முந்தல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், கற்பிட்டி பொலிஸாருடன் இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கடற்பிரதேசத்தை அண்டிய பகுதியில் மூடைகளில் பொதி செய்யப்பட்ட மஞ்சள் லொறியொன்றில் ஏற்றுவதற்கு தயாராக இருந்த நிலையில் மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த 60 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 1,800 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, 60 மூடைகளில் அடைக்கப்பட்ட 1,800 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மஞ்சள் உள்ளூர் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் நோக்கில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்வாறு, மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கொரோனா தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன், குறித்த மஞ்சள் மூடைகளை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட லொறி பொலிஸாரின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.