எரிபொருள் விலை உயர்வால் வன்முறை: கஜகஸ்தான் அரசு ராஜினாமா…!!
எண்ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கார்களுக்கு பெரும்பாலும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் கஜகஸ்தான் அரசு இந்த எரிபொருள் மீதான விலையை அண்மையில் உயர்த்தியது. இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, எரிபொருள் விலை உயர்வை கண்டித்து அங்கு போராட்டம் வெடித்தது.
இந்த சூழலில் கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியிலும், மேற்கு மங்கிஸ்டாவ் மாகாணத்திலும் இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அல்மாட்டி நகரில் மேயரின் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.
இதை தொடர்ந்து போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் இரு தரப்புக்கும் இடையில் பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அங்கு தொடர்ந்து அசாதாரண சூழல் நீடிக்கிறது.
இந்தநிலையில் அந்த நாட்டின் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் அல்மாட்டி நகரிலும், மேற்கு மங்கிஸ்டாவ் மாகாணத்திலும் 2 வார காலத்துக்கு அவசர நிலைபிரகடனப்படுத்தப்படுவதாக நேற்று அறிவித்தார். அதோடு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு மீதான விலையை குறைப்பதாகவும் அவர் அறிவித்தார். ஆனாலும் அங்கு போராட்டமும், வன்முறையும் தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில் தொடர் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக கஜகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் தலைமையிலான அரசு நேற்று ராஜினாமா செய்தது. அரசின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட அதிபர் காசிம், துணைப் பிரதமர் அலிகான் ஸ்மைலோவ் தலைமையில் இடைக்கால அரசை அமைக்க உத்தரவிட்டார்.