பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம்- தேர்தல் கமிஷன் பரிந்துரை…!!
செலவின பணவீக்க குறியீடு கடந்த 2014-ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை செலவின பண வீக்க குறியீடு அதிகரித்ததை கருத்தில் கொண்டு வேட்பாளர்களுக்கான செலவின உச்ச வரம்பை மறு ஆய்வு செய்யும் வகையில் கமிட்டி ஒன்றை தேர்தல் கமிஷன் ஏற்படுத்தியது.
அந்த குழு ஆய்வு நடத்தி 2014-ம் ஆண்டில் 83.4 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த 2021-ம் ஆண்டு 93.6 கோடியாக உயர்ந்ததை மேற்கோள் காட்டி பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் வேட்பாளர்களுக்கான செலவின உச்சவரம்பை 12 முதல் 42 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்று பரிந்துரைத்தது.
அதன் அடிப்படையில் புதிய உச்சவரம்பை மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் தெரிவித்த தகவல்கள் வருமாறு:-
கடந்த 2014-ம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட முந்தைய திருத்தத்தின்படி பெரிய மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் செலவின உச்ச வரம்பு ரூ.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பின்னர் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தற்காலிக ஏற்பாடாக இந்த தொகை ரூ.77 லட்சமாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.95 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறிய மாநிலங்களில் ரூ.54 லட்சத்தில் இருந்து ரூ.75 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலை பொருத்த வரை பெரிய மாநிலங்களில் வேட்பாளர்களுக்கான திருத்தப்பட்ட தேர்தல் செலவின உச்ச வரம்பு ரூ.28 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய மாநிலங்களில் ரூ.20 லட்சத்துக்கு பதிலாக ரூ.28 லட்சம் வரை வேட்பாளர்கள் செலவு செய்யலாம்.
செலவின பண வீக்க குறியீடு அதிகரிப்பு, வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்வு ஆகியவற்றை மறு ஆய்வுக்கு உட்படுத்தி இந்த புதிய செலவின உச்சவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது நடைபெற உள்ள உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்களுக்கும் பொருந்தும்.
மேலும் கடந்த 7 ஆண்டுகளில் செலவின பண வீக்க குறியீடு 240-ல் இருந்து 317 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.