தலைமுடியில் எச்சில் துப்பிய சிகையலங்கார நிபுணர்: எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார்…!
புகழ்பெற்ற சிகையலங்கார நிபுணர், ஜாவத் ஹபிப். வெளிநாட்டில் பயிற்சி பெற்ற ஹபிப், நாடு முழுவதிலும், வெளிநாடுகளிலும் ஆடம்பர சிகையலங்கார நிலையங்களை நடத்திவருகிறார். இவர், பிரசித்தமான ‘போர்ப்ஸ்’ பத்திரிகையில் இடம்பெற்ற கோடீஸ்வரர். பிரபலங்களின் பிரியத்துக்குரிய சிகையலங்கார கலைஞர்.
ஹபிப்பின் தாத்தா நசீர் அகமது, இந்தியாவின் கடைசி வைசிராய் மவுண்ட்பேட்டன், முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆகியோரின் ஆஸ்தான சிகையலங்கார கலைஞராக இருந்தவர். இவரது தந்தை ஹபிப் அகமது, ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ சிகையலங்கார நிபுணராக பணிபுரிந்தவர்.
இப்படி பெருமைகள் பலவற்றுக்கு சொந்தக்காரரான ஜாவத் ஹபிப்தான் தற்போது சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார்.
ஒரு சிகையலங்கார பயிற்சி வகுப்பில் பெண் ஒருவரின் தலை கேசத்தில் இவர் எச்சில் துப்பியதுதான் பிரச்சினைக்கு காரணம்.
கடந்த ஜனவரி 3-ந்தேதி உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் நடந்ததாக கூறப்படும் அந்த பயிற்சி வகுப்பில், ஒரு பெண்ணின் தலையில் சிகை அலங்காரம் செய்துகாட்டிய ஹபிப், ‘சிகையலங்காரத்தின்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், எச்சிலை பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்று கூறியபடி அந்த பெண்ணின் தலையில் உமிழ்கிறார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜாவத் ஹபிப் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அவர், தலையில் துப்பியதாக கூறப்படும் பூஜா குப்தா என்ற பெண்ணும் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்புக்கோரி ஹபிப் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், ‘அலுப்பை ஏற்படுத்தும் நீண்ட பயிற்சி வகுப்பை கொஞ்சம் நகைச்சுவை ஆக்குவதற்காகத்தான் நான் அவ்வாறு செய்தேன். அதில் யாருக்கும் வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ள தேசிய பெண்கள் ஆணையம், இதுகுறித்து தீவிரமாக விசாரிக்கும்படி உத்தரபிரதேச போலீசை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஹபிப்புக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
மறுபுறம், ஜாவத் ஹபிப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சில இந்து அமைப்புகள், அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்புகின்றன.
எல்லாம், விளையாட்டுத்தனமாய் செய்த ‘குசும்பினால்’ வந்த வினை!