சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பு இணைந்து நடத்திய பொங்கல் விழா !! (படங்கள், வீடியோ)
சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பு மற்றும் யாழ் நண்பர்கள் அமைப்பும் இணைந்து நடத்திய பொங்கல் விழா இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 10 மணியளவில் நல்லை ஆதீன மண்டபத்துக்கு முன்பாக இடம்பெற்ற பொங்கல் விழாவுக்கு விருந்தினர்கள் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
இதன்போது பல்வேறு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் கண்டிய நடனம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிகழ்வின் போது பொங்கல் பானையில் விருந்தினர்களால் அரிசி போடப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு பெளத்த பாரம்பரிய முறைப்படி கண்டிய மேள தாளங்கள் முழங்க நடைபெற்றது.
இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, நாகவிகாரை விகாராதிபதி சிறீவிமல தேரர், நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், மறவன்புலவு சச்சிதானந்தன், யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் மதத்தலைவர்கள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வுகளின்போது இராணுவம் மற்றும் பொலிசாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு காணப்பட்டதுடன் நிகழ்வு மண்டபத்தின் பெரும்பாலான ஆசனங்கள் வெறுமையாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”