பிரியங்கா காந்தி அறிவித்த காங்கிரஸ் வேட்பாளர் அகிலேஷ் கட்சிக்கு தாவல்…!!
உத்தர பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே கட்சி தாவல்கள் தொடங்கி விட்டன. முக்கிய கட்சிகளான பா.ஜனதா, சமாஜ்வாடி, காங்கிரஸ் இடையே பலர் கட்சி தாவி வருகின்றனர். கட்சிகள் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து வரும் நிலையில் இந்த கட்சி தாவல்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நபரே வேறொரு கட்சிக்கு மாறியுள்ளது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரெய்லி முன்னாள் மேயர் சுப்ரியா ஆரோன். பரெய்லி கன்ட் தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி கடந்த 13-ந் தேதி அறிவித்திருந்தார்.
திடீரென அவர் தன் கணவரும் முன்னாள் எம்.பி.யுமான பிரவீண் சிங் ஆரோனுடன் சனிக்கிழமை சமாஜ்வாடியில் இணைந்தார். கட்சி மாறினாலும் பரெய்லி கன்ட் தொகுதியிலேயே போட்டியிட உள்ளதாக சுப்ரியா ஆரோன் அறிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சியும் அவர் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. அதற்காக அந்த தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ராஜேஷ் அகர்வாலை சமாஜ்வாடி கட்சி மாற்றியுள்ளது.
கடந்த 2012 சட்டசபை தேர்தலில் பரெய்லி கன்ட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுப்ரியா ஆரோன் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.