முஸ்லிம் என கூறி மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு தடுக்கப்பட்டது – பிரிட்டன் பெண் எம்.பி. குற்றச்சாட்டு…!!
பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் பழமைவாத கட்சி ஆட்சி நடக்கிறது. இக்கட்சியின் எம்.பி.,யான நஸ்ரத் கனி, 2018 ஆண்டில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்த நஸ்ரத் கனி, பிரிட்டனில் குடியேறியவர். இந்நிலையில் 2020 ஆண்டு பிப்ரவரியில் போரிஸ் ஜான்சன், அமைச்சரவையை மாற்றி அமைத்தார். அப்போது, நஸ்ரத் கனிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
இது குறித்து ஓராண்டுக்கு பிறகு நஸ்ரத் கனி எம்.பி., தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிரிட்டன் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக விவாதம் நடைபெற்றபோது கட்சியின் பாராளுமன்ற கொறடா,எனக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். முஸ்லிம் என்பதால் என்னுடன் பேச, கட்சி எம்.பி.,க்களுக்கு அசவுகரியமாக உள்ளதே அதற்கு காரணம் என்று கூறினார். இந்த சம்பவத்தை வெளியே கூறினால் என் எதிர்கால அரசியல் வாழ்வு பாழாகக் கூடும் என சிலர் எச்சரித்தனர். அதனால் நான் மவுனமாக இருந்து விட்டேன். கட்சியின் மீதான எனது நம்பிக்கையை இழக்கவில்லை என்று நான் பாசாங்கு செய்ய மாட்டேன். எம்.பி.யாக நீடிக்கலாமா என்று சில சமயங்களில் தீவிரமாக யோசித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
பிரிட்டன் எம்.பி.யின் இந்த குற்றச்சாட்டிற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் அலுவலகம் உடனடியாக பதில் அளிக்கவில்லை. எனினும் நஸ்ரத் கனியின் குற்றச்சாட்டை பழமைவாத கட்சியின் பாராளுமன்ற கொறடா மார்க் ஸ்பென்சர் மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, அவை அவதூறானவை என்று நான் கருதுகிறேன். அந்த வார்த்தைகளை நான் ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.