;
Athirady Tamil News

32 ஆண்டாக சாண எரிவாயுவில் சமைக்கும் விவசாயி குடும்பம்…!!

0

கிராமப்புறங்களிலும் கூட, பாரம்பரிய முறை விறகு அடுப்புகளில் சமைப்பதை காண்பது அரிதாகவிட்டது. குக்கிராம குடிசை வீடுகளிலும் சமைப்பதற்கு எரிவாயு உருளைகளே பயன்படுத்தப்படுகின்றன.

சமையல் எரிவாயு உருளைக்கு அரசு மானியம் வழங்கினாலும், எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில், ஏறக்குறைய ஆயிரம் ரூபாயை விழுங்கி விடுவதால் இது ஒரு சுமையாகவே மாறிவிட்டது.

இதனால் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவதில் மக்கள் தனி கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பொன்னாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயி குடும்பத்தினர், 32 ஆண்டுகளாக சமையல் எரிவாயு இணைப்பின்றி, தான் வளர்க்கும் கால்நடைகளின் கழிவான சாணத்தைக் கொண்டே எரிவாயு உற்பத்தி செய்து சமைப்பதற்கு பயன்படுத்தி வருவதால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

பொன்னாரம்பட்டி பரவக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மகேஷ் (52). இவர் 32 ஆண்டுக்கு முன்பு அரசு மானியம் மற்றும் கடனுதவி பெற்று ரூ.28 ஆயிரம் செலவில், கால்நடைகளின் கழிவான சாணத்தை பயன்படுத்தி சமையல் எரிவாயு தயாரிக்கும் கலனை அமைத்தார். இந்த கலனை தொடர்ந்து பராமரித்து இன்று வரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து விவசாயி மகேஷ் மற்றும் இவரது மனைவி ஜெலட்சுமி ஆகியோர் நமது செய்தியாளரிடம் கூறியதாவது:

பொன்னாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாங்கள் விவசாயத்தை பிரதானமாக நம்பியுள்ளோம். இத்தோடு, கறவைமாடு, ஆடுகள், கோழி உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகிறோம்.

கால்நடைகளின் கழிவான மாட்டு சாணத்தில் இருந்து எரிவாயு தயாரித்து சமைப்பதற்கு பயன்படுத்த முடியுமென, 32 ஆண்டுகளுக்கு முன் அதிகாரிகள் தெரிவித்தபோது, எங்களால் முதலில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அரசு மானியமும், கடனுதவியும் வழங்குவதாக தெரிவித்ததால், சோதனை முயற்சியாக சாண எரிவாயு கலன் அமைத்தோம். வாரத்திற்கு 2 முறை இரு மாட்டு சாணத்தை எடுத்து கரைத்து தொட்டியில் நிரப்பி வைத்தாலே, எவ்வித செலவும், தட்டுப்பாடுமின்றி சமைப்பதற்கு எரிவாயுவை கட்டணமின்றி பெற முடிந்தது. 30 ஆண்டுக்கு முன் கூட்டுக்குடும்ப வாழ்க்கை நடத்திய தருணத்திலேயே இந்த எரிவாவு போதுமானதாக இருந்தது.

இதனால் தொடர்ந்து இந்த எரிவாயு கலனை பராமரித்து பயன்படுத்தி வருகிறோம். தற்போது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், வாரத்திற்கு ஒருமுறை சாணத்தை கரைத்து விட்டாலே ஒரு வாரத்திற்கு சமைப்பதற்கு தேவையான எரிவாயு கிடைத்துவிடுகிறது. இதனால், தற்போதைய விலை நிலவரப்படி ஓராண்டுக்கு ஏறக்குறைய ரூ.10 ஆயிரம் வரை குடும்பச் செலவு குறைகிறது.

எனவே, ஓரிரு கறவை மாடு அல்லது எருது வளர்க்கும் விவசாயிகள், தொழிலாளர்களும் கூட குறைந்த செலவு, இடவசதியை பயன்படுத்தி இந்த சாண எரிவாயு கலன் அமைத்து, சமையல் எரிவாயு செலவை தவிர்த்து பயன்பெறலாம். எங்களுக்குப் பின்னரும் முன்னோர்கள் வழியில் எங்களது குடும்பத்தினர் தொடர வேண்டும் என்பதால், பொறியியல் பட்டம் படித்த எங்களது மகன் சுரேஷ்குமாரை இயற்கை விவசாயம் சார்ந்த பணிக்கு அனுப்பியுள்ளோம் என்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.