;
Athirady Tamil News

ஆம் ஆத்மி சர்வே நடத்தியது ஏமாற்று வேலை- தேர்தல் ஆணையத்திடம் சித்து புகார்…!!

0

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரி வேட்பாளராக பகவந்த் மான் நிறுத்தப்பட்டுள்ளார். முதல்வர் வேட்பாளர் தொடர்பாக போன் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட கருத்துக்கணிப்பில் பகவந்த் மானுக்கு ஆதரவாக 93.3 சதவீதம் மக்களும், காங்கிரஸ் தலைவர் சித்துவுக்கு ஆதரவாக 3.6 சதவீத மக்களும் கருத்து தெரிவித்ததாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி நடத்திய இந்த கருத்துக் கணிப்பானது, காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாததுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அத்துடன் கட்சியின் மாநில தலைவர் சித்து, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சித்து கூறியதாவது:-

முதல்வர் வேட்பாளர் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி நடத்திய சர்வே, மோசடி மற்றும் ஏமாற்று வேலை ஆகும். ஜனவரி 13 முதல் 17 வரை 21.59 லட்சம் நபர்களிடம் கருத்துக்களை பெற்றதாகவும், 93.3 சதவீதம் பேர் பகவந்த் மானின் பெயரைக் தெரிவித்ததாகவும் கெஜ்ரிவால் கூறியிருந்தார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து 3.6 சதவீத வாக்குகள் பெற்றதாக அவர் கூறினார்.

ஒரு குறிப்பிட்ட நாட்களில் தனிப்பட்ட எண்ணில் இவ்வளவு அழைப்புகளைப் பெற முடியாது. அவர்கள் கொடுத்த தரவை ஆராய்ந்தால், அவர்களின் கணிப்பு பொய் என்பது தெரியவரும். வழக்கமாக, இதுபோன்ற அழைப்புகள் குறைந்தபட்சம் 15 வினாடிகளாவது இருக்கும். அப்படி இருந்தால் ஒரு நாளில் 5,760 அழைப்புகள் மட்டுமே செய்ய முடியும், மேலும் நான்கு நாட்களில் 23,040 அழைப்புகள் வரை வரலாம். அப்படி இருக்கையில், இந்த சர்வே மக்களை ஏமாற்றும் வேலை. இதைத்தான் அவர் (கெஜ்ரிவால்) செய்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

போலிச் செய்திகளை வெளியிடும் இந்த வழிமுறையானது, தேர்தல் நடத்தை விதிகளை முற்றிலும் மீறுவதாகும். இதை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம் ஆத்மி சர்வேயில் சுமார் 7 லட்சம் வாட்ஸ்அப் மெசேஜ்களும், 2.50 லட்சம் வாய்ஸ் மெசேஜ்களும், தோராயமாக 8 லட்சம் குரல் அழைப்புகளும் கிடைத்துள்ளன.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, இந்தப் பிரசாரம் போலியானது எனத் தெரிந்தால், ஆம் ஆத்மி கட்சி மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.