இந்தியாவின் உண்மையான எதிரி சீனா – அகிலேஷ் யாதவ் பேட்டி…!!!
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அங்கு பிரசாரம் சூடு பிடித்து வரும் நிலையில், ஆளும் பாஜகவிற்கும், முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதிக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு சமாஜ்வாதிக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அளித்திருந்த பேட்டியில், நமது உண்மையான எதிரி சீனா,பாகிஸ்தான் நமது அரசியல் எதிரி என்று தெரிவித்திருந்தார். ஆனால், பா.ஜ.க. வாக்குவங்கி அரசியலுக்காக பாகிஸ்தானை மட்டுமே குறிவைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அகிலேஷ் யாதவ் பாகிஸ்தான் ஆதரவாளர், சமாஜ்வாதி கட்சி தமது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இது வெளிப்படையாக தெரிவதாகவும் பாஜக குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு பதில் அளித்து அகிலேஷ் யாதவ் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
ஜெனரல் பிபின் ராவத் கூறுவதையே பாகிஸ்தான் விஷயத்திலும் நான் கூறினேன். சீனா நமது மிகப்பெரிய எதிரி என்று அவர் கூறியிருந்தார். நாட்டின் வடக்கு எல்லைப் பகுதியிலேயே அச்சுறுத்தல் அதிக அளவில் உள்ளதை மறுக்க முடியாது என்று அவர் தெரிவித்திருந்தார். பிபின் ராவத்தை மேற்கோள் காட்டாமல் இருக்க முடியுமா? இவ்வாறு அகிலேஷ் கூறியுள்ளார்.