கொரோனா பரவலை கட்டுப்படுத்த 9 மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை…!!
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 3-வது அலை உச்சத்தில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பரவல் விகித வேகம் அதிகமாக உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்தநிலையில் 9 மாநிலங்களை சேர்ந்த சுகாதாரத்துறை மந்திரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார்.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரபிரதேசம், இமாசலபிரதேசம், பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட், டெல்லி, ஜம்மு-காஷ்மீர், லடாக், சண்டிகர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுகாதாரத்துறை மந்திரிகள் பங்கேற்றனர்.
இதில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் கொரோனா பரவல் அதிகம் உள்ள 6 மாநிலங்களின் பட்டியலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.
அதில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், டெல்லி ஆகியவை இடம்பெற்று இருந்தன.