பிறந்து 3 நாட்களே ஆன நிலையில் திருச்சூர் காட்டு பகுதியில் மயங்கி கிடந்த யானை குட்டி..!!!
கேரள மாநிலம் திருச்சூர் சிம்னி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
சிம்னி வனவிலங்கு சரணாலயம் அருகே சென்றபோது சாலையில் யானை குட்டி ஒன்று மயங்கி கிடந்தது. வன ஊழியர்கள் அருகில் சென்று பார்த்த போது, அது பிறந்து 3 நாளே ஆன யானை குட்டி என தெரியவந்தது.
பின்னர் வனத்துறை ஊழியர்கள் இது பற்றி கால்நடைதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து டாக்டர்கள் விரைந்து வந்து யானை குட்டிக்கு சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சைக்கு பின்னரும் யானையால் எழுந்து நடமாட முடியவில்லை. இதையடுத்து கால்நடை துறையினர் அந்த யானை குட்டியை சரணாலயத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, யானை குட்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
யானை குட்டி குணமானதும் அதனை காட்டு பகுதியில் விட ஏற்பாடு செய்யப்படும். அந்த யானை குட்டி காட்டை விட்டு எப்படி வெளியே வந்தது என்பது பற்றி விசாரணை நடத்தப்படும். மேலும் அதன் தாய் யானையை கண்டுபிடிக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளோம், என்றனர்.