நிதி நிறுவனத்தை ஏமாற்றி 3 வருடத்தில் 5 மெர்சிடிஸ் கார்கள்- மோசடி மன்னன் கைது
ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் பிரமோத் சிங். இவர் மீது நிதி நிறுவனம் ஒன்று 2018-ம் ஆண்டு போலீசில் புகார் அளித்தது.
அதில் பிரமோத் சிங் நிதி அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.27.5 லட்சம் கடன் வாங்கி மெர்செடிஸ் கார் ஒன்றை வாங்கினார். பின் அதற்கான தவணை தொகையை முறையாக கட்டி வந்துள்ளார்.
இதன் மூலம் நிதி நிறுவனத்திடம் தன் மீது நம்பிக்கை வர வைத்த பிரமோத் சிங் அடுத்தத்து 4 முறை கடன் வாங்கியுள்ளார். அதற்கும் சில மாதங்களுக்கு தவணை கட்டியுள்ளார். பின் திடீரென்று மாயமாகிவிட்டார். அவரை தேடி வீட்டிற்கு சென்றபோது அவர் தப்பி ஓடியது தெரிய வந்தது.
பிரமோத் சிங் அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ. 2.18 கோடி கடனாக பெற்று மோசடி செய்துள்ளார். அவரை கைது செய்ய போலீசார் தேடி வந்த நிலையில் பிரமோத் சிங் 3 வருடங்களாக தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடைபெற்ற விசாரணையில் மோசடி செய்த தொகையில் இதுவரை 3 வருடங்களில் 5 மெர்சடிஸ் கார்களை வாங்கியுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதில் சில கார்களை சட்ட சிக்கல் ஏற்படாமல் நல்ல விலைக்கு விற்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.