50 சதவீத மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிசெய்வதற்கான அனுமதி பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு…!!
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதை தொடர்ந்து மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இதுதொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் ஜனவரி மாதம் 3-ம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி, செயலாளருக்கு குறைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 50 சதவீதத்தினருக்கே அனுமதி அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கலாம். ஒரே நேரத்தில் அலுவலகத்தில் குவிவதை தடுக்க 9 மணி முதல் 5.30 மணி வரை, 10-6.30 மணி என மாற்று பணி நேரம் வழங்க வேண்டும்.
அலுவலகத்துக்கு வராத ஊழியர்கள் எப்போதும் தொலைபேசி அல்லது மின்னணு சாதனங்கள் மூலம் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும் வேண்டும். இது ஜனவரி 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்தது.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் 50 சதவீதத்தினர் வீட்டில் இருந்தே பணிசெய்வதற்காக அனுமதி அளித்த உத்தரவை பிப்ரவரி மாதம் 15-ம் தேதி வரை நீடித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.