;
Athirady Tamil News

பெகாசஸ் சர்ச்சை – எந்த தகவலும் இல்லை என்கிறது வெளியுறவு அமைச்சகம்…!!!

0

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி, இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், மனித உரிமைவாதிகள் ஆகியோரின் தொலைபேசிய உரையாடல்கள் உளவு பார்க்கப்பட்டதாக கடந்த ஆண்டு தகவல் வெளியானது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பான எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆண்டு பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தின் போது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, அதன் விவரங்கள் அனைத்தும் பொதுவில் உள்ளதாகவும் பாக்சி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பெகாசஸ் உளவு செய்தியில் முகாந்திரம் இல்லை. இந்திய ஜனநாயகத்தை களங்கப்படுத்த அச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. உளவு மென் பொருளை மத்திய அரசு வாங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், விளக்கம் அளித்தார்.

இதையடுத்து சபையில் தவறான தகவல் கூறியதாக அவர் மீது மூன்று மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உரிமை மீறல் தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவை கூடியது. பெகாசஸ் விவகாரம் குறித்து 267-வது விதியின் கீழ் விவாதிக்க சில எம்.பி.க்கள் கொடுத்த நோட்டீஸ் நிராகரிக்கப்படுவதாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் மற்றும் 2 எம்.பி.க்கள் கொடுத்த உரிமை மீறல் தீர்மானங்களை ஆய்வு செய்து வருவதாகவும், ஆய்வுக்கு பிறகு மத்திய மந்திரியிடம் விளக்கம் கேட்கப்படும். விளக்கத்தின் அடிப்படையில், தீர்மானத்தை ஏற்பதா? நிராகரிப்பதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.