தலவாக்கலையில் பாரிய தீ பரவல்!!
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தொழிற்சாலைக்கு மேல் உள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் பாரிய தீ ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ பரவல் இன்று (06) மாலை 4.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
வரட்சியான காலநிலையுடன் கடும் காற்று நிலவி வருவதனால் தீ மிக வேகமாக பரவி வருவதாகவும் தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது கடினமாக உள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாத எவராவது தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
தீ பரவல் காரணமாக அறியவகை தாவரங்கள் நீரூற்றுகள் சிறிய விலங்கினங்கள் என பலவும் அழிவடையும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன.
தற்போது நுவரெலியா மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினை தொடர்ந்து பல வளமான காட்டு பகுதிகளுக்கும் புற்தரைகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும் பாலான வனப்பகுதி அழிவுக்குள்ளாகியுள்ளன.
இந்த காடழிப்பு காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே இந்த காடழிப்புடன் தொடர்புடையவர்களை உடன் கைது செய்யப்பட்டு காடுகளுக்கு தீ வைப்பதனை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.