தமிழ் இனப் படுகொலை – குற்றஞ்சாட்டு மறுப்பு!!
மனித குலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் இனப்படுகொலை என்ற சொல், ஒரு தேசிய, சாதி, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட செயல்களை உள்ளடக்கியது.
எனவே, 2009 இல் முடிவடைந்த இலங்கையின் இறுதிக்கட்ட மோதலை இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான ´இனப்படுகொலை´யாக சித்தரிக்க கனடாவில் உள்ள சில தரப்பினர் முயற்சிப்பதை கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கவலையுடன் குறிப்பிடுகின்றது.
கனடாவில் உள்ள இலங்கை சமூகம் பல இனங்கள் மற்றும் பல மதங்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட ´தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரம்´ தொடர்பான தனியார் உறுப்பினர் சட்டமூலம் 104, ஒரு சமூகத்திற்கு எதிரான தவறான கதையைச் சித்தரிப்பதன் மூலம் இலங்கை சமூகத்தினரிடையே சமூக உறவுகளில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கனேடிய அரசாங்கத்தின் இலங்கைத் தமிழ் கனேடியர்களுக்கான பல்வேறு திட்டங்களைப் பாராட்டும் அதே வேளையில், 2022 ஜனவரி 31 ஆந் திகதி இடம்பெற்ற மனநலம் மற்றும் ஆரோக்கியத் திட்டங்கள் மற்றும் வளங்களைக் கொண்ட தமிழ் மாணவர்களுக்கான நிதியுதவியை அறிவிக்கும் நிகழ்வில், ஒன்ராறியோவின் கல்வி அமைச்சர் திரு. ஸ்டீபன் லெஸ் ´அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற ஒரு இனப்படுகொலையை நாங்கள் அங்கீகரிக்கின்றோம்´ மற்றும் ´கொழும்பில் ஆட்சியின் கைகளில் 140,000 அப்பாவிகள் கொல்லப்பட்ட ஒரு இனப்படுகொலை´ என்பன உள்ளிட்ட கருத்துக்களைக் குறிப்பிட்டிருந்தமை தொடர்பில் நாங்கள் ஏமாற்றம் அடைகின்றோம். இந் நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்கார்பரோ – ரூஜ் பார்க் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய்தணிகாசலம் அவர்களும் தனது கருத்துக்களில் ´தமிழ் இனப்படுகொலை´ என்று குறிப்பிட்டுள்ளார்.
2021 ஏப்ரல் 07ஆந் திகதியிட்ட இராஜதந்திரக் குறிப்பில், கனடாவின் வெளியுறவு, வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம் ´இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கனடாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிவிவகார, வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது, இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கனடா அரசாங்கம் கண்டறியவில்லை என்பதை திணைக்களம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியும்´ எனக் குறிப்பிட்டுள்ள தெளிவுபடுத்தலை நாங்கள் பாராட்டுகின்றோம். மேலும், கனடா அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக தடை செய்துள்ளது.
இந்தப் பின்னணியில், ´தமிழ் இனப்படுகொலை´ என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவது, ஒன்ராறியோவில் வசிக்கும் இலங்கைக் கனேடியர்களின் பிள்ளைகள் மற்றும் சமூகத்தினரிடையே கருத்து வேறுபாடுகளையும் தப்பான அபிப்பிராயத்தையும் உருவாக்குகின்றது. எனவே, சமூக நல்லிணக்கத்தை கருத்திற்கொண்டு சர்வதேச சமூகத்தில் இலங்கை பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்க வேண்டும்.
இலங்கையில் இறுதிக்கட்ட மோதலின் போது, உலகம் கண்ட மிகக் கொடூரமான பயங்கரவாதக் குழுக்களில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவை அரசாங்கப் படைகள் எதிர்கொண்டன. இலங்கையை இன ரீதியாகப் பிரித்து தனிநாடு அமைப்பதே விடுதலைப் புலிகளின் நோக்கமாக இருந்தது. இந்த நோக்கத்துடன், அவர்கள் மூன்று தசாப்த கால பயங்கரவாதப் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்ததுடன், அது அனைத்து சமூகங்களுக்கும் மிகுந்த துன்பத்தையும் அழிவையும் ஏற்படுத்தியிருந்தது.
2009 இல் இராணுவ மோதலின் இறுதிக் கட்டங்களில், விடுதலைப் புலிகள் தவிர்க்க முடியாத தோல்வியை எதிர்கொண்ட போது, தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்ததுடன், மோதல் பிரதேசங்களிலிருந்து பொதுமக்களை நகர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மறுத்திருந்தனர். பொதுமக்கள் உயிரிழப்புக்கள் குறித்த குற்றச்சாட்டு மற்றும் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் கூறுவதானது, அரசாங்கத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக வெளிநாட்டுத் தலையீட்டை வலுக்கட்டாயப்படுத்த புலிகள் முயன்ற வழிமுறையாகும்.
இருந்தபோதிலும், அரசாங்கப் படைகள் சுமார் 290,000 தமிழ் பொதுமக்களை விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மீட்டு, அவர்களைக் பராமரித்து, அவர்களை மீள் குடியேற்றியிருந்தது. மேலும், 12,000 க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதுடன், இதன் மூலம் எதிரிப் போராளிகள் மத்தியிலும் தேவையற்ற மரணங்களை ஏற்படுத்துவதை இலங்கை அரசாங்கம் தவிர்த்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, விடுதலைப் புலிகளுடனான இராணுவ ஈடுபாட்டின் போது ´இனப்படுகொலை´ என்ற போலியான குற்றச்சாட்டுக்களின் செயல் மற்றும் / அல்லது உள்நோக்கம் இருந்ததாகக் கூறுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ´இனப்படுகொலையை´ பரிந்துரைக்கும் நிகழ்வுகளின் வடிவமும் இல்லை. இராணுவ மோதலின் கடைசிக் கட்டத்தில் நிலைமையைக் கருத்தில் கொண்டு, தந்திரோபாயத் தெரிவுகள் நியாயமானவையும், விகிதாசாரமானவையுமாகும் என இராணுவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய குழுக்கள் மற்றும் அனுதாபிகள் உட்பட சில தரப்பினர், இறுதிக்கட்ட இராணுவ மோதலின் போது இலங்கையில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுவதற்கு, ஐ.நா. வினால் நியமிக்கப்பட்ட சில குறைபாடுள்ள அறிக்கைகளில் உள்ள குடிமக்கள் உயிரிழப்புக்களின் கற்பனையான புள்ளிவிவரங்களை பின்பற்றுகின்றனர். எவ்வாறாயினும், மிகவும் சர்ச்சைக்குரிய ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழு அறிக்கை கூட இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான ´இனப்படுகொலை´ குற்றச்சாட்டைக் கொண்டிருக்கவில்லை. 2015இல் இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் விசாரணைக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முக்கிய கண்டுபிடிப்புக்கள் இலங்கையின் ´போர்க்குற்றங்கள்´, ´இனப்படுகொலை´ என்று கூட பரிந்துரைக்கவில்லை. இனப்படுகொலையின் கூற்றை ஆதரிக்கும் குழுக்கள், மோதலின் இறுதி மாதங்களில் ´40,000 பொதுமக்கள் இறந்திருக்கலாம்´ என நிபுணர்கள் குழு அறிக்கையில் எந்த ஆதாரமும் இல்லாமல் செய்யப்பட்ட கூற்றை பின்பற்றுகின்றனர். இலங்கை இராணுவத்தால் இறுதியாக மீட்கப்பட்ட மக்களின் உண்மையான எண்ணிக்கையை வைத்து 40,000 பொதுமக்கள் மரணங்கள் இடம்பெற்றன என்ற கற்பனையான புள்ளிவிவரத்துடன் நிபுணர்கள் குழு அறிக்கை வெளிவந்ததுடன், 330,000 என்ற அனுமான எண்ணிக்கைக்கு எதிராக இது அண்ணளவாக 290,000 ஆகும். இது அந்தப் பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்னர் (வன்னி) இருந்த பொதுமக்களின் எண்ணிக்கையாக அவர்கள் கருதினர். நிபுணர்கள் குழுவால் பயன்படுத்தப்படும் 330,000 பொதுமக்கள் என்ற கற்பனையான எண்ணிக்கை முற்றிலும் தன்னிச்சையான கட்டமைப்பாகும். 2009ஆம் ஆண்டு குறித்த மாதங்களில் விடுதலைப் புலிகள் எத்தனை பொதுமக்களை சிறைபிடித்து வைத்திருந்தார்கள் என்பது இலங்கையிலோ அல்லது வெளியிலோ எவருக்கும் சரியாகத் தெரியாது.
மேலும், நிபுணர்கள் குழு அறிக்கை இலங்கையில் ஐக்கிய நாடுகளின் நாட்டுக் குழுவால் அறிவிக்கப்பட்ட 7,721 இறப்புக்கள் (13 மே 2009 வரை) என்று குறிப்பிடுகின்றது. எவ்வாறாயினும், 40,000 என்ற எண்ணிக்கை சரியானதாகவும், துல்லியமானதாகவும் இருந்தால், மோதல் முடிவுக்கு வரும் 2009 மே 18 வரை இறுதி நாட்களில் 30,000 க்கும் அதிகமானோர் எப்படி கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை விளக்காமல் இந்த எண்ணிக்கை பின்னர் நிபுணர்கள் குழு அறிக்கையால் மறுக்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம், வடக்கு மாகாணத்தில் இலங்கையின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் வடமாகாணத்தில் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, இயற்கை காரணங்கள் தவிர மற்ற காரணங்களால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது கண்டறியப்பட்டது 9,283 என்பது குறிப்பிடத்தக்கது. 1981ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின் பின்னர் நாட்டின் அந்தப் பகுதியில் இது போன்ற முதல் கணக்கெடுப்புத் திட்டத்திற்குத் தேவையான களத் தரவு சேகரிப்பானது, வட மாகாணத்தில் பணியாற்றும் பெரும்பான்மை இனமான தமிழ் அரசாங்க ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஜூலை 2006 முதல் மே 2009 வரை விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது இலங்கை ராணுவத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,876 ஆகும். 2008 மற்றும் 2009 இல் இயற்கை அல்லாத காரணங்களால் வடக்கு மாகாணத்தில் இறந்ததாகக் கூறப்படும் (9,283) இலங்கையின் ஆயுதப் படைகளை விட விடுதலைப் புலிகள் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைச் சந்தித்திருப்பார்கள் என்று கருதுவது தர்க்க ரீதியானதாக இருக்கும் என்பதுடன், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் விடுதலைப் புலிகள் அல்லது நேரடியாகப் போரில் ஈடுபட்டவர்களாக இருந்திருப்பார்கள்.
நிபுணர்கள் குழு அறிக்கையின் பலவீனமான சர்ச்சைக்குரிய நபரின் பயன்பாடு, அது ஏற்றுக்கொண்டதாகக் கூறும் ஆதாரத்தின் தரத்தால் மோசமாகின்றது என்பதை சட்ட வல்லுநர்கள் அடையாளம் கண்டுள்ளனர். சட்டப்பூர்வமற்ற பகுப்பாய்வு (´நான் உறுதியாக உணர்ந்தேன்´, நான் நியாயமான நம்பிக்கையுடன் உணர்ந்தேன்´, நான் முற்றிலும் உறுதியாக இருந்தேன்´, ´எனக்கு சந்தேகம் இருந்தது´ போன்றவை) ஒரு பெரிய அளவிலான குற்றச் செயல்களைக் கையாளும் ஆவணத்தில் பயன்படுத்தப்படுவதுடன், இது பொறுப்பானவர்கள் மற்றும் மேலும் நீதித்துறை மற்றும் ஏனைய செயன்முறைகளுக்குத் தகுதியானவர்களைப் பெயரிடுகின்றது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைகளில் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்காக சர்வதேச நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் இந்த வகையான அறிக்கைகளின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
2009 இல் மோதல் முடிவுக்கு வந்ததில் இருந்து, இலங்கை மறுசீரமைப்பு, இழப்பீடு, மறு ஒருங்கிணைப்பு, புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் கொள்கையை மறுசீரமைப்பு நீதியின் ஒட்டுமொத்த கருத்தாக்கத்தில் பின்பற்றி வருகின்றது. இலங்கை இந்த செயன்முறைகளை முன்னெடுத்துச் செல்லும் நேரத்தில், விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் எச்சங்கள் உட்பட சில குழுக்கள், ´தமிழ் இனப்படுகொலை´ போன்ற நிகழ்ச்சி நிரல்களை முன்வைத்து, இலங்கை மேற்கொண்ட முயற்சிகளை மதிப்பிழக்கச் செய்யவும், சீர்குலைக்கவும் முயற்சித்து வருகின்றன.
140,000 இறப்புக்களை மேற்கோள் காட்டிய திரு. ஸ்டீபன் லெஸ்ஸின் கருத்துக்களில் காணப்படுவது போல், சரிபார்க்கப்படாத அறிக்கைகளின் உள்ளடக்கங்கள் சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்துவதிலும், கருத்தை உருவாக்குவோர் மற்றும் முடிவெடுப்பவர்களிடம் செல்வாக்குச் செலுத்துவதிலும் வெற்றி பெற்றுள்ளன. காலப்போக்கில், ஐ.நா. அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஆதாரங்களின் சந்தேகத்திற்கிடமான தன்மை மறக்கப்பட்டால், உண்மையில் நிரூபிக்கப்படாத அவர்களது குற்றச்சாட்டுக்கள், மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் வலிமையானக மாறலாம்.
ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றுடன் நீண்டகால ஒத்துழைப்பில் ஈடுபட்டு, உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான தனது அர்ப்பணிப்பை வழங்கும் நேரத்தில், இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் உறவுகளை பாதிக்கின்றது.
எனவே, இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவருக்கும் இலங்கை உயர்ஸ்தானிகர் இந்த விடயம் தொடர்பில் தன்னைப் பார்வையிடவும், சந்திக்கவும், உரையாடவும் ஒரு திறந்த அழைப்பை விடுக்கின்றார்.