;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துச் செல்கின்றது!!

0

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துச் செல்கின்றது எனவும் இது ஆரோக்கியமானது அல்ல எனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்தில் கொரோனா பரவலானது அதிகரித்துச் செல்கின்றது. ஜனவரி மாத முற்பகுதியில் இருந்து கொரோனா பரவல் அதிகரித்துச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது.

இந்த அதிகரிப்பு ஆரோக்கியமானதாக இல்லை. தற்பொழுது அனைத்துச் செயற்பாடுகளும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக போக்குவரத்து,கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா தொற்றின் நிலை மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக சுகாதார துறையினர் எச்சரித்துள்ளார்கள்.

ஆகவே சுகாதார அமைச்சினால் இறுதியாக வெளியிடப்பட்ட சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக பொது மக்கள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும்.மேலும் ஒன்றுகூடல்‌களை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக தேவையற்ற பயணங்கள் நடமாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

தற்போதைய நிலையில் தடுப்பூசி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 62 வீதத்திற்கு மேற்பட்டோர் முதலாம் கட்ட தடுப்பூசியையும் அதற்கு குறைவானவர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் பூஸ்ரர் தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்கள் சற்றுக் குறைவாக இருந்தபோதும் தற்பொழுது மக்கள் ஆர்வம் காட்டி இந்தத் தடுப்பூசியை பெற்று வருவது அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

ஆகவே இந்தத் தடுப்பூசியை முறையாகப் பெற்றுக் கொள்வது சுகாதார பகுதியினரினால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனவே பொது மக்கள் வீண் வதந்திகளை நம்பாது தடுப்பூசிகளை தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் பெற்றுக் கொள்ளவேண்டும்.

யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரையில் டெங்கு காய்ச்சலும் அதிகமாக காணப்படுகின்றது. புள்ளி விபரத்தின் படி யாழ்.மாவட்டம் டெங்கு அபாய வலயமாக காணப்படுகின்றது. எனவே பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கிராம உத்தியோகத்தர்கள் ஏனையோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மேலும் மலோரியா அபாயம் இருந்தபோதும் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொது மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.