இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடு!!
இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாகும் என்று பல நாடுகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனால் இந்த வருடத்தில் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
எதிர்பார்த்த அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இதற்காக விசேட பிரச்சார நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை மக்கள் கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டிகளை உரிய முறையில் கடைப்பிடித்து வாழ்ந்து வருவதாக பல வெளிநாட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளிலும் கொவிட் தொற்று நிலைமை மாறும் பட்சத்தில் மேலும் பல சுற்றுலா பயணிகள் இலங்கை வருவார்கள் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர் பதிலளிக்கையில், இவ்வாறான சர்வதேச நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஜப்பான், சீனா, இந்தியா நாடுகளுடன் தற்போதைய டொலர் நெருக்கடி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றன. எவ்வாறாயினும். 6.9 பில்லியன் கடனை திருப்பி செலுத்த அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எதிர்காலத்தில் நோயை முற்றாக கட்டுப்படுத்தி கொள்ள 3 ஆவது தடுப்பூசியை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
உலக நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் பரவி வருகிறது. இதனால் தொற்றின் காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல் நிலையை தடுப்பதற்கு 2 தடுப்பூசிகளையும் பெற்றுகொள்வதுடன் 3 ஆவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கும் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.