;
Athirady Tamil News

வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவோர், பொதுமக்கள் பற்றிச் சிந்தியுங்கள்..!

0

பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி இந்நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்துச் செயற்படுகின்றன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

எவ்வாறான சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் மூலம் உறுதியளிக்கப்பட்டவாறு, விவசாயப் பெருமக்களின் வருமானத்தை நூற்றுக்கு நூறு வீதத்தால் அதிகரிக்கவும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவும் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அநுராதபுரத்தில் “பொதுஜன பேரணி” ஆரம்பம்…

“மக்களைத் தவறாக வழிநடத்தி, நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ள சிலர் முயற்சி…”

“விவசாயப் பெருமக்களின் வருமானத்தை நூறு சதவீதத்தால் உயர்த்துவோம்..!”

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுப் பேரணிகளின் “முதலாவது பொதுஜன பேரணி” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில், அநுராதபுரம் சல்காது மைதானத்தில், இன்று (09) பிற்பகல் இந்தப் பொதுக் கூட்டம் இடம்பெற்றது.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம், பெரும் சவால்களுக்கு மத்தியில் இந்த அரசாங்கம் அடைந்த இலக்குகள் தொடர்பில் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் இந்தப் பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொதுக் கூட்ட வளாகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்க்ஷ அவர்களும் அநுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், “மஹிந்த ராஜபக்க்ஷ அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அன்று செயற்பட்டது போன்றே, தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசாங்கத்தின் பயணத்தைத் தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டார்.

“அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்கள், எதிர்காலச் சந்ததியினரின் நலனை இலக்கு வைத்தே முன்னெடுக்கப்படுகின்றன. அதனால், எவ்வாறான தடைகள் ஏற்படினும் தொடர்ந்து முன்னோக்கி நகர்வோம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கிப் போராட்டங்களை நடத்துபவர்கள், பொதுமக்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். அரச ஊழியர்கள், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும். புத்தெழுச்சிபெற்று வருகின்ற பொருளாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, நாட்டை முடக்காமல் அரசாங்கத்தின் கொள்கைகளைச் செயற்படுத்த இடமளிப்பதே இன்றைய தேவையாக உள்ளது” என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான எஸ்.எம்.சந்திரசேன, ஜீ.எல்.பீரிஸ், ரோஹித்த அபேகுணவர்தன, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, சன்ன ஜயசுமன, கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.நந்தசேன, கே.பி.எஸ்.குமாரசிறி ஆகியோரும் இந்தப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினர்.

மஹா சங்கத்தினர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், வடமத்திய மாகாண ஆளுநர், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபை, பிரதேச சபைத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் எனப் பெருந்தொகையானோரும் இந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.