;
Athirady Tamil News

தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல தடை – கர்நாடக ஐகோர்ட்..!!

0

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வரவேண்டும் என அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது.

அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவியது. ஒரு சில இடங்களில் மோதல்களும் அரங்கேறியது. இதையடுத்து பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து வரவேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையே பள்ளி, கல்லூரிகளுக்கு கர்நாடக அரசு விதித்துள்ள ஆடை கட்டுப்பாட்டு மற்றும் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகளான ரேஷ்மா பாரூக், காஜிரா மற்றும் அவரது தாய் உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி கிருஷ்ண தீக்சித் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

அப்போது, கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது. ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினையை கர்நாடக ஐகோர்ட்டின் விரிவான அமர்வு விசாரிக்கும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், காஸி ஜெய்புனிஷா முகைதின் (பெண் நீதிபதி) முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:

ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமைகளுக்கு கீழ் வருகிறதா என்பது குறித்து பரிசீலனை செய்கிறோம். அதேபோல், ஹிஜாப் அணிவது (இஸ்லாமிய) மத நடைமுறையில் இன்றியமையாததா? என்பது குறித்து பரிசீலனை செய்ய உள்ளோம்.

இந்த வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தெரிவிக்கும் வாய்மொழி கருத்துக்களை ஊடகங்கள் வெளியிட வேண்டாம்.

தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்லத் தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.