;
Athirady Tamil News

கலப்பு தேர்தல் முறைமையில் உள்ளூராட்சி மன்றதேர்தலை நடத்துவது தொடர்பில் அவதானம்!!

0

விகிதாசாரம் மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறைமையிலான கலப்பு தேர்தல் முறைமையில் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் சட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பில் தேர்தல் முறைமை தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய 60சதவீத பிரதிநிதிகளை விகிதாசார தேர்தல் முறைமையின் அடிப்படையிலும், 40 சதவீத பிரதிநிதிகளை தொகுதிவாரி தேர்தல் முறைமையின் கீழ் தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் சட்டம் மறுசீரமைப்பு தொடர்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவு குழு கடந்த வாரம் கூடியபோது இவ்விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் சகல அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளுராட்சி மன்றங்களின் தற்போதைய பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கும் தற்போது அமுலிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறை,விருப்பு வாக்கு முறை ஆகியன பற்றிய பொதுமக்களின் நம்பகத்தன்மை வெகுவாக குறைவடைந்துள்ளன.

விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை மற்றும் விருப்பு வாக்கு முறைமை ஆகியவற்றில் காணப்படும் குறைப்பாடுகளை கருத்திற் கொண்டு கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை மிகச்சிறந்த தேர்தல் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது என தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.