சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் கையொப்பமிடுவதற்காக மிரட்டப்பட்டார்களா?
13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி இந்தியப் பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் கையொப்பமிடுவதற்காக மிரட்டப்பட்டார்களா அல்லது யாராவது ஏதும் சொன்னார்களா என்று தெரியவில்லை என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே 13ஐ எதிர்க்கிறீர்கள் ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்தபோதே சிறீதரன் எம். பி.,
‘நான் மட்டுமே 13ஐ எதிர்க்கவில்லை. சம்பந்தன் ஐயாகூட ஆரம்பத்திலிருந்தே 13ஐ எதிர்த்தார். சவப்பெட்டிக்கு இறுதி ஆணியும் அடித்து அதனை நாம் அனுப்பி விட்டோம் என்று 13 பற்றி 2000 ஆண்டுகளில் சம்பந்தன் ஐயா சொல்லியிருந்தார்.
1987இல் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோருடன் சம்பந்தன் ஐயாவும் 13ஐ ஏற்கவில்லை. 2008 தேர்தலிலும் பங்கேற்கவில்லை.
13ஆவது திருத்தச் சட்டம் சர்வதேச ஒப்பந்தம் என்பதாலேயே சாகாமல் இருக்கிறது. நாட்டுக்குள் எழுதப்பட்ட டட்லி – செல்வா, பண்டா – செல்வா, ரணில் – பிரபாகரன் ஒப்பந்தங்களுக்கு எல்லாம் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும்.
சுதுமலை பிரகடனத்தின் போது தலைவர் பிரபாகரன் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை தமக்கு படிக்கத் தரவில்லை என்றும் வாசித்தே காண்பிக்கப்பட்டது எனவும் கூறியிருந்தார்.
அவர் அதனை ஒருபோதும் ஏற்கவில்லை. சம்பந்தன் ஐயாவும் எதிர்த்தே வந்தார். எனினும் எந்தக் காரணத்துக்காக? ஏன் சம்பந்தன் ஐயா இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் கையொப்பம் வைத்தார் என்பது அதிசயமாக இருக்கிறது.
இந்தக் கடிதத்தில் கையொப்பமிட முன்னர் அரசியல் குழு கூட்டத்தை கூட்டி முடிவு எடுப்போம் என்று மாவை சேனாதிராசாவிடம் கேட்டேன். கதைப் போம்… கதைப்போம்… என்று பிற்போட்டு விட்டு அவர் சென்று கையொப்பமிட்டு விட்டு வந்துவிட்டார்.
இதன் பின்னால் என்ன சக்தி இருக்கிறது என்று தெரியாது. அவர்கள் வெருட்டப்பட்டார்களா? (மிரட்டப்பட்டார்களா) அல்லது யாராவது ஏதும் சொன்னார்களா? என்று தெரியாது. அவர்கள் தலைமை மட்டம் என்ன நடந்தது என்று தெரியாது. – என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”