போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடைவிதிப்பு பற்றிய தகவல்களை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளவேண்டும் – அமன்டா கஹ்ரெமனி வலியுறுத்தல்!!
இலங்கையில் போர்க்குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏனைய நாடுகளின் அரசாங்கங்கள் தடைவிதிக்கமுடியும். அதேவேளை குறித்த நபருக்கெதிராகத் திரட்டப்பட்ட ஆதாரங்கள் மற்றும் தடைவிதிப்பிற்கான காரணங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டு ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் என்று சட்டத்தரணியும் சர்வதேச குற்றவியல் சட்டம் தொடர்பான நிபுணரும் சர்வதேச நீதிக்கான கனேடிய கூட்டாண்மையின் ஆய்வாளருமான அமன்டா கஹ்ரெமனி வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை ‘தடைவிதிப்பு’ என்பது பொறுப்புக்கூறல் செயன்முறையின் ஒரு பகுதி மாத்திரமே என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆகவே பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான ஏனைய நடவடிக்கைகள் சிவில் சமூக அமைப்புக்களின் ஊடாக முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
‘இலங்கையில் தண்டனையிலிருந்து பாதுகாப்புப்பெறும் போக்கிற்கு எதிரான போராட்டத்தை வலுவூட்டுதல்’ என்ற தலைப்பில் தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகளுக்கான நிலையம் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் ஆகிய இரு அமைப்புக்களுடனும் இணைந்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 7.30 மணிக்கு நிகழ்நிலை ஊடாகக் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அக்கலந்துரையாடலில் பங்கேற்றுக்கொண்டு ‘மீறல்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராகத் தடைவிதித்தல்’ குறித்துக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,
குறித்தவொரு நபருக்கெதிராகத் தடைகளை விதிப்பதென்பது சட்டரீதியான நடவடிக்கை என்பதை விடவும், மனித உரிமைகள்சார் கடப்பாடுகள் முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கான அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியிலான அழுத்தத்தை வழங்குவதை முன்னிறுத்திய நடவடிக்கையாகும். குறித்தவொரு நாடு தனியொரு நபருக்கு எதிராகத் தடைவிதிப்பதன் மூலம் அவர் தமது நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கமுடியும்.
அதேபோன்று அவரது சொத்துக்களை முடக்கவும் எதிர்காலத்தில் அவர் தமது நாட்டுடன் நிதி மற்றும் வர்த்தக ரீதியான கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும் முடியும். பொறுப்புக்கூறல் விவகாரத்தில் வெளிக்காட்டப்பட்டுவரும் மறுப்பும் சர்வதேச நீதி என்பது மட்டுப்படுத்தப்பட்டதோர் விடயமாகக் காணப்படுகின்றமையும் கடந்த சிலவருடங்களாக ‘தடைவிதிப்பு’ குறித்து அதிகம் பேசப்படுவதற்கு வழிவகுத்துள்ளது.
அதன்படி நீதியை நிலைநாட்டுவதற்கான ஆயுதமாகத் தடைவிதிப்பைப் பயன்படுத்தமுடியும். எனினும் இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில், குறித்தவொரு நபருக்கெதிராகத் தடைவிதிக்கப்படும்போது அதுபற்றி போதியளவு வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும்.
சம்பந்தப்பட்ட நபருக்கெதிராக ஆதாரங்களைத் திரட்டுவதிலும் தடைவிதிப்பு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதிலும் வெளிப்படைத்தன்மைவாய்ந்த செயன்முறை அவசியமாகும்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் சிவில் சமூகங்களால் திரட்டப்பட்ட ஆதாரங்களின்படி போர்க்குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏனைய நாடுகள் தடைகளை விதிக்கமுடியும்.
அதேவேளை அவ்வாறு திரட்டப்பட்ட ஆதாரங்கள் மற்றும் குறித்தவொரு நபருக்கெதிராகத் தடைவிதித்தமைக்கான காரணம் என்பவற்றை அரசாங்கங்கள் (சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள்) பரஸ்பரம் பகிர்ந்துகொண்டு, ஒத்துழைப்புடன் செயற்படமுடியும்.
அதேபோன்று இந்தத் தடைவிதிப்பு நடவடிக்கை மனித உரிமைகளை மையப்படுத்தியதாகவும் அதுகுறித்த தகவல்களை சிவில் சமூக அமைப்புக்களாலும் சர்வதேச கட்டமைப்புக்களாலும் பெற்றுக்கொள்ளக்கூடியவகையிலும் அமையவேண்டும்.
மேலும் ‘தடைவிதிப்பு’ என்பது பொறுப்புக்கூறல் செயன்முறையின் ஒரு பகுதியேயாகும். ஆகவே பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான ஏனைய நடவடிக்கைகள் சிவில் சமூக அமைப்புக்களின் ஊடாக முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அத்தோடு இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்காவினால் தடைவிதிக்கப்பட்டமை போன்ற சில உதாரணங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, இலங்கையில் போர்க்குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சர்வதேச நாடுகள் தடைவிதிக்கவேண்டும் என்று வலியுறுத்தி தம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் பிரசாரம் தொடர்பில் பிரஸ்தாபித்ததுடன் ஐக்கிய நாடுகள் சபை உள்ளடங்கலாக முக்கிய சில பொதுக்கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அடையாளங்காணப்பட்டிருப்பவர்கள் அரச நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கும் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரப்பதவிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்தும் கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”