;
Athirady Tamil News

மலையக மக்களின் அரசியல் ஆவணம் கொழும்பில் இறுதி வடிவம் பெறுகிறது!!

0

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையின் பேரில், கண்டி சமூக அபிவிருத்தி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி. முத்துலிங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கௌதமன் பாலசந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவண வரைபு, பெப்ரவரி 21ம் திகதி கொழும்பில் கலந்துரையாடப்பட்டு இறுதி வடிவம் பெறும்.

இந்த கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் மலையக சிந்தனையாளர்கள் கலந்துக்கொள்வார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, இறுதி வடிவம் பெறுகின்ற இந்த ஆவணம், இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட அனைத்து கட்சி தலைவர்கள், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட தமிழக கட்சி தலைவர்கள், பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச நாட்டு அரசுகள், சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சேர்ப்பிக்கப்படும்.

அத்துடன் இந்த ஆவணம் தேசியரீதியான கலந்துரையாடல்களுக்காக நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரந்து வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புகளுக்கு வழங்கப்படும். சிவில் சமூக அமைப்புகளுடன் நாம் நடத்த உத்தேசித்துள்ள கலந்துரையாடல்கள், இலங்கை, இந்தியா, பிரிட்டன் மற்றும் சர்வேதச அரசு நிறுவனங்களுடன் நாம் நடத்தும் பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக அமையும் என நாம் நம்புகிறோம்.

புதிய அரசியலமைப்பு வரைபை தாயரித்து வரும் தனது உத்தேசத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பு வரைபு எழுதப்பட்டு வருவதையும் நாமறிவோம். இந்த பின்னணியில் இன்றைய சூழலில் எழுந்துள்ள புதிய நிலைமைகளை கருத்தில் கொண்டு மலையக மக்கள் தொடர்பாக விரிவுபடுத்தப்பட்ட நிலைப்பாட்டு கோரிக்கைகளை நமது நாட்டு அரசுக்கு அறிவித்து, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாம் உதேசித்துள்ளோம்.

அதேவேளையில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு வழங்கி வரும் உதவிகள் மற்றும் அதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புதிய கருத்து பறிமாற்றங்களையும் நாம் அவதானித்து வருகிறோம். இந்த தொடர்பாடல்கள், பொருளாதார ஒத்துழைப்பு விவகாரங்களுடன் மாத்திரம் மட்டுப்படுவது முறையானதல்ல என நாம் நம்புகின்றோம். 1954 (நேரு-கொத்தாவலை), 1964 (சிறிமா-சாஸ்திரி),1974 (சிறிமா-இந்திரா), ஆகிய ஆண்டுகளில் இலங்கை இந்திய அரசு தலைவர்கள் மத்தியில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களின்படியும், இந்திய பிரதமர்களுக்கும், இலங்கை ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜெயவர்த்தன, ஆர். பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின்படியும், இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள், குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இலங்கை அரசுடன் இந்திய அரசுக்கும் இருக்கின்ற கடப்பாடுகள் நல்லெண்ண அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் எதிர்பார்ப்பாகும்.

இதுபற்றி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பையும் தமிழ் முற்போக்கு கூட்டணி நிறைவேற்றும்.

அதேவேளை மலைநாட்டு தோட்ட தொழிலாளர்களை இலங்கை தீவுக்கு அழைத்து வந்து பெருந்தோட்ட பொருளாதாரத்தை கட்டி எழுப்பி, பயன்பெற்றதன் அடிப்படையில் பிரித்தானிய இராணியின் அரசாங்கத்துக்கும், மலையக மக்கள் தொடர்பில் இருக்கின்ற பெரும் கடப்பாட்டையும் எடுத்து கூறி, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தமிழ் முற்போக்கு கூட்டணியின் முடிவு செய்துள்ளது.

நாம் முன்வைக்க உள்ள, இந்திய வம்சாவளி மலையக மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் இந்த அரசியல் ஆவணம், மேற்கண்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு நட்புறவு மற்றும் நல்லெண்ண நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக அமையும் என நாம் நம்புகிறோம். இது தொடர்பில் நாடெங்கும் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களினதும், அனைத்து சகோதர மக்களினதும் ஒத்துழைப்புகளையும், ஆதரவையும் நாம் கோருகிறோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.