ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,100 – பஞ்சாப்பில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி…!!
பஞ்சாப்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து நேற்று காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது.
தேர்தல் வாக்குறுதிகள் பற்றி மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து சண்டிகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான கோப்பில் முதல்-மந்திரி, முதலாவதாக கையெழுத்திடுவார்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,100 வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு ஆண்டுக்கு 8 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
சமையல் கியாஸ் சிலிண்டர்கள்
விவசாயிகளிடம் இருந்து பருப்பு வகைகள், எண்ணை வித்துக்கள், மக்காச்சோளம் ஆகிய விளைப்பொருட்கள் குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும்.
கேபிள் தொலைக்காட்சி சேவையில் தனிநபர் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். கேபிள் மாத கட்டணம் ரூ.200 ஆக குறைக்கப்படும். முதியோர் மாத ஓய்வூதியம் ரூ.1,500-ல் இருந்து ரூ.3,100 ஆக அதிகரிக்கப்படும்.
அரசு மருத்துவமனைகளில் அனைத்து மருத்துவ சேவைகளும் எல்லோருக்கும் இலவசமாக அளிக்கப்படும். மருத்துவத்துக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்படும். தொழில்களை ஊக்குவிக்க ரூ.1000 கோடியில் நிதி உருவாக்கப்பட்டு புதிய தொழில் முனைவோருக்கு ரூ.2 லட்சம் கடன் உதவி வட்டி இல்லாமல் வழங்கப்படும்.
தேசிய ஊரக வேலை திட்டத்துக்கான தினசரி சம்பளம் ரூ.270 ஆக உயர்த்தப்படும். வேலை நாட்கள் 100-ல் இருந்து 150 ஆக உயர்த்தப்படும்.
மதுபானம், மணல் விற்பனைக்காக தனி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு சமூக விரோத கும்பலின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டப்படும். தேர்தல் அறிக்கையில் 13 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது ராகுல்காந்தியின் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.