ஈரான் தீவிரமாக இருந்தால் ஓரிரு நாட்களில் அணுசக்தி ஒப்பந்தம் சாத்தியம்- அமெரிக்கா தகவல்…!!
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியதை தொடர்ந்து, ஈரான் அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஒவ்வென்றாக புறக்கணித்து வருகிறது. அதே சமயம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இணங்கி நடந்ததால் அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது. இது தொடர்பாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தநிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், பரஸ்பர புரிதலோடு ஈரான் இந்த விஷயத்தில் தீவிரமாக இருந்தால் ஓரிரு நாட்களில் ஒப்பந்தம் சாத்தியமாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “கடந்த வாரத்தில் பேச்சுவார்த்தைகள் கணிசமான முன்னேற்றத்தை கண்டன. இதே புரிதலோடு ஈரான் தீவிரமாக செயல்பட்டால் சில நாட்களிலேயே நல்ல முடிவை காணலாம். அதற்கு மாறாக நடந்தால் அது, ஒப்பந்தத்துக்கு திரும்புவதற்கான சாத்தியத்தை பெரும் ஆபத்தில் வைக்கும்” என கூறினார்.
இதனிடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான இறுதி முடிவை ஈரான் விரைவில் எடுக்க வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.