பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நீலகவின் தாய் வழங்கிய சாட்சி!!
கொலை, பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 24 வயதுடைய சந்தேக நபரான நீலக சந்தருவன் என்ற இலிபே நீலகவின் மரணத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.
துப்பாக்கி தோட்டாக்கள் காரணமாக உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட காயங்களினால் அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சண்டையின் போது சந்தேக நபரின் மார்பு, கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு பதிவாகி இருந்தது.
அங்குருவத்தோட்ட, வல்பிட்ட, பீடி கொல சந்தி பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் நேற்று முன்தினம் (17) மறைந்திருந்த சந்தேகநபர், STF அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்த நிலையில் STF அதிகாரிகள் பதில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதன்போது சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, 42 வயதுடைய நிலக்காவின் தாயார் சாந்தனி குமாரி குருப்புஆராச்சி இவ்வாறு சாட்சி வழங்கியிருந்தார்.
“எனது மூன்று மகன்களில் மூத்தவரான நீலகதான் உயிரிழந்துள்ளார். நீலக போதைப்பொருளுக்கு அடிமையானவர். மருமகள் மீது சந்தேகப்பட்டு இம்மாதம் 11ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகாயமடையச் செய்திருந்தார். .அவள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். பின்னர் அவர்களின் 8 வயது மகன் நீதிமன்றத்தால் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டான். கடந்த 17ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் நீலக, ஹல்வதுர இங்கிரிய பகுதியில் அமைந்துள்ள எமது வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினார். கணவர் கதவைத் திறந்தார். மகன் குழந்தையைப் பார்த்து கையைப் பிடித்து இழுக்க முற்பட்ட போது அவரது தந்தை கதவை மூடிவிட்டார்.
“அன்றைய தினம் காலை 6 மணியளவில் நாங்கள் இருவரும் எங்கள் மகனின் மகனை அழைத்துக் கொண்டு ஹொரண கந்தானையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றோம். அன்று காலை 7.40 மணியளவில் நீலக முச்சக்கரவண்டியில் வந்து குழந்தை எங்கே என்று கேட்டார். குழந்தையை ஒரு அறையில் மறைத்து வைத்தோம். முச்சக்கரவண்டியில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து வீட்டின் எல்லா இடங்களிலும் தேடி, அறையில் இருந்த குழந்தையை அழைத்துக் கொண்டு முச்சக்கர வண்டிக்கு அருகில் சென்ற பின்னர் வானத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார். “அப்போது முச்சக்கர வண்டி சாரதியை காணவில்லை. முச்சக்கரவண்டியை கொளுத்திவிடுவதாக மகன் எச்சரித்து சத்தம் போட்டான். அப்போது மறைந்திருந்த முச்சக்கரவண்டியின் சாரதி வந்தார். பின்னர் மாலை வேளையில், மகன் வல்பிட பீடிகொல சந்தியில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்து. உயிரிழந்தது எமது மகன் என பின்னர் நாங்கள் அடையாளம் கண்டு கொண்டோம்.