ஆட்சியாளர்களுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்க மாட்டோம்!!
நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற கட்சியாக இருக்கின்றோம். தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்க மாட்டோம். நாங்கள் மக்களது பிரச்சனையை கதைப்போம். மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதனை பேச முன்னிற்போம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (19) இடம்பெற்றது. இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வன்னி மாவட்டத்துடன் நான் சம்மந்தமுள்ளவானாக இருக்கின்றேன். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. நான் ஜனாதிபதியாக முன் பல அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்தேன். சுகாதாரம், நீர்பாசனம், விவசாயம் என பல பொறுப்புக்களில் இருந்தேன். அதன் போது வன்னி பிரதேசத்திற்கு வந்து பல சேவைகளை செய்துள்ளேன். 2015 ஆம் ஆண்டு என்னை ஜனாதிபதியான தெரிவு செய்ய அதிக வாக்குகளை நீங்கள் வழங்கினார்கள். நான் ஜனாதிபதியாக இருந்த போதும் பல சந்தர்ப்பங்களில் வன்னிக்கு வந்தேன்.
ஜனாதிபதியாக இருந்த போது இந்த மாவட்டத்தில் பல அபிவிருத்திகளை செய்துள்ளேன். வடக்கு, கிழக்குக்கு என ஒரு அமைப்பினை நான் நிறுவினேன். யுத்தம் நடந்த பகுதிகளில் அபிவிருத்திகளை துரிதப்படுத்துவதற்கு அந்த அமைப்பை நிறுவினேன். என்னால் பல அபிவிருத்திகளை செய்ய முடிந்தது. சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் என்ற வேறுபாடு என்னிடம் இல்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் இல்லை. அனைவரையும் இந்த நாட்டு மக்கள் என்று தான் பார்கின்றேன். எனது நெஞ்சிலே இருந்து சொல்கின்றேன். நிரந்தர சமாதானத்தை உருவாக்க வேண்டும் என்று தான் நினைத்து கொண்டிருக்கிறேன்.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தேன். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் மூலம் நிதி வழங்கினேன். சீனாவில் இருந்து அதற்கு உதவிகளை பெற்று பொலனறுவையில் சிறுநீரக வைத்தியசாலையை நிறுவினேன்.
எனது ஆட்சிக்காலம் ஏழை மக்களுக்கு சுபீட்சமுள்ள ஒரு காலமாக இருந்தது. அன்றாட தேவைக்களுக்கான பொருட்களின் விலை அதிகரிக்கவில்லை. விவசாயத்திற்கு தேவையான பெருட்களுக்கு தட்டுபாடு இருக்கவில்லை. வவுனியா போன்றே மற்றைய பிரதேசங்களிலும் விவசாயம் செய்யக் கூடிய மக்கள் இருக்கிறார்கள். விவசாயிகளுக்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். உங்களிடத்தில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. விலைவாசி அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது. மின்சாரத் தடை ஏற்படுகிறது. பெற்றோலுக்கு நீண்ட வரிரைசயில் நிற்க வேண்டியுள்ளது. இப்படி பல பிரச்சனைகள் உள்ளன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வளர்த்து மக்களுக்கு சிறந்த ஆட்சியை ஏற்படுத்த மாவட்டம் மாவட்டமாக செல்கின்றோம். சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துங்கள். உங்களுடன் சகோதரமாக வேலை செய்ய இன்னும் பல சகோதர கட்சிகளை இணைத்துக் கொண்டு உங்களிடத்தில் வர இருக்கின்றோம். வருகின்ற தேர்தலுக்காக இவ்வாறு செயற்படுகின்றோம்.
நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற கட்சியாக இருக்கின்றோம். தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்க மாட்டோம். நாங்கள் மக்களது பிரச்சனையை கதைப்போம். மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதனை பேச முன்னிற்போம். பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இதையே பேசுகின்றோம். நாங்கள் எமது கட்சியின் அங்கத்தர்வாகள் ஒன்று சேர்ந்து ஒரு தீர்மானத்தை எடுத்து ஆட்சியாளர்களுக்கு கொடுத்துள்ளோம். இந்த அரசாங்கத்தின் நல்ல விடயங்களுக்கு மாத்திரம் ஆதரவு கொடுக்கின்றோம். மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதனை தட்டுடிக் கேட்கப் பின்னிற்க மாட்டோம்.
உங்களுக்கு உள்ள சகல பிரச்சனைகளையும் தீர்க்க எமது கட்சியுடன் இணையுங்கள். இந்த மக்கள் சந்தோசமாக இல்லை. அவர்கள் சந்தோசமாக இருந்தால் தான் கட்சி, அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் சந்தோசமடைய முடியும். மகளுடன் பேசும் போது பல கவலைகளை கூறுகிறார்கள். நாட்டில் இறையாண்மை பிரச்சனையாக இருக்கின்றது. கஸ்டம் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளது. வேலை இல்லாமையால் பலர் நாட்டை விட்டு வெளிநாடு செல்கிறார்கள். நாட்டை அபிவிருத்தி செய்து இந்த நாட்டில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எமது ஆசை எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, துமிந்த சில்வா, நிமால் சிறிபாலடி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.