கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் சுதந்திரக் கட்சியில் இணைவு?
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாக தெரியவருகிறது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (19.02) இடம்பெற்றது. இதில் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.
இந்நிலையில், வவுனியாவிற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் க.சுமந்திரன் பிரத்தியேக இடமொன்றில் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிய வருகின்றது. விரைவில், அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையவுள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக நகரசபை உறுப்பினர் சுமந்திரனிடம் வினவிய போது,
வவுனியா மாவட்ட விவவசாய சம்மேளத்தின் உப தலைவராக உள்ளேன். எமது சம்மேளனம் சார்பான 10 பேரினை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2.30 மணிக்கு நேரம் ஒதுக்கியிருந்தார். இந்நிலையில் நாங்கள் 05 பேர் மட்டும் சென்று சந்தித்து எமது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தோம்.
நான் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதிப்படுத்தும் நகரசபை உறுப்பினர் என்றாலும், வவுனியா மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்தும் ஒரு விவசாய சம்மேளத்தின் உப தலைவர் என்ற ரீதியில் மட்டுமே நான் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தேனே தவிர சுதந்திர கட்சியில் இணைவதற்காக செல்லவில்லை என தெரிவித்திருந்தார்.