;
Athirady Tamil News

கல்வி எமது இனத்தின் மிகப்பெரிய கொடை!!

0

கல்வி எமது இனத்தின் மிகப்பெரிய கொடை. இன்று உலகம் பூராகவும் கல்விக் கொடை பரந்து காணப்படுகின்றது. எமது மாணவர்கள் அதனை திறம்பட செய்து வருகின்றனர். புலம்பெயர் தேசங்களில் உள்ள எமது உறவுகள் வடக்கு கிழக்கில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு செய்து வருகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வன்னி மண் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் ´கல்விக்கு கரம் கொடுப்போம்´ எனும் தொனிப்பொருளில் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 38 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு இன்று (19) காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் கலந்து கொண்டார்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கி வைக்கப்பட்ட பின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ´கல்விக்கு கரம் கொடுப்போம்´ என்பது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கல்வியினுடைய ஆரம்ப காலத்தில் 1972 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதி தரப்படுத்தல் வருவதற்கு முன்பாக இலங்கையின் பல்வேறு துறைகளில் பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்கள் வடக்கு கிழக்கில் அதிகமானவர்கள்.

ஆனால் தரப்படுத்தலின் பிற்பாடு மாவட்டங்களின் வரையறை மட்டுப்படுத்தப்பட்டு வரையறைக்குள் உற்படுத்தப்பட்டே பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படுகிறது.

ஆனால் கிடைக்கப்பெறுகின்ற அனுமதியை நாங்கள் தகுந்த முறையில் கொண்டு செல்ல வேண்டும்.

பல்கலைக்கழக அனுமதியை நாங்கள் பெற்றுக் கொள்ளுவதோடு,எங்களுடைய பிரதேசத்திற்கு , எமது மாவட்டங்களுக்கு நாங்கள் முழுமையான கல்வியை மட்டும் கற்றால் போதாது.எம்மைச் சூழ உள்ளவர்களையும் நாங்கள் கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டும்.

அல்லது அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவியை பொருளாகவோ அல்லது பணமாகவோ அல்லது ஆலோசனையாக கட்டாயம் நாம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு பாட நெறிகளுக்கும் குறிப்பிட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்ற போது அடுத்த நிலை மாணவர்கள் எங்கு செல்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று இவ்வாறானவர்கள் பல் துறை அரச நிறுவனங்கள் ஊடாக டிப்ளோமா தரத்தில் உள்வாங்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு மனக் குறை ஒன்று உள்ளது.

நாங்கள் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்கிற ஒரு மனக்குறை அவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

எனவே மாணவர்களாகிய நீங்கள் உங்களால் முடிந்த யாராக இருந்தாலும் கல்வியை மற்றவர்களுக்கு புகட்ட வேண்டும்.

கல்வி மிகப் பெரிய ஒரு செல்வம்.எனவே மற்ற செல்வங்களை போன்று நாங்கள் கல்வியை கருத முடியாது.

மாவட்டமாக இருக்கலாம், பிரதேசமாக இருக்கலாம் கல்வியின் மூலமாகவே வளர்ச்சி அடையும்.

புலம்பெயர் தேசங்களில் இருக்கும் எமது வடக்கு கிழக்கை சேர்ந்த சிறுவர்கள், மாணவர்கள் கல்வியில் சாதனை புரிகிற அளவுக்கு அவர்களின் பெறுபேறுகள் அமைந்துள்ளது.

கல்வி எமது இனத்தின் மிகப்பெரிய கொடை. இன்று உலகம் பூராகவும் கல்விக் கொடை பரந்து காணப்படுகின்றது. எமது மாணவர்கள் அதனை திறம்பட செய்து வருகின்றனர்.

புலம்பெயர் தேசங்களில் உள்ள எமது உறவுகள் இங்குள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு செய்து வருகிறார்கள்.

புலம்பெயர் தேசங்களில் இருக்கும் உறவுகளை நாங்கள் கௌரவிக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் மன்னார்,மடு கல்வி வலய அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.