சுதந்திரக்கட்சி, சிங்களக் கட்சி அல்ல!!
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எனக்கு வழங்கிய மிகப்பெரிய ஆணைக்கு செயல் வடிவில் நன்றி கூறி வருகிறேன் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் இன்று (21) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட மாநாட்டு நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
யாழ் மக்கள் எமக்களித்த அன்புக்கும் அரவணைப்பிற்கும் தலை வணங்கவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு வந்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குறிப்பிட்ட காலத்திற்குள் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது.
அன்று எனக்கு ஜனாதிபதி தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்ல ஒரு வாய்ப்பினையும் அதனூடாக 5 மாத காலம் ஓர் அமைச்சுப் பதவியும் தந்து ஊக்குவித்தமை தான் இன்று நான் தொடர்ந்தும் மக்கள் பணியாற்றி வர பிரதான காரணம்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ் மாவட்டத்திற்கு 21 தடவைகள் விஜயம் மேற்கொண்டு யாழ் மக்களின் விவசாயம், காணி விடுவிப்பு , நல்லிணக்கம், இன ஒற்றுமை உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார். அதுதான் இன்றும் சுதந்திரக்கட்சியை யாழில் வழிநடத்திச் செல்ல மிகப்பெரிய தூணாக விளங்குகிறது.
வரலாற்றில் முதல் தடவையாக யாழ் மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஓர் ஆசனத்தை தந்து மிகப்பெரிய ஆதரவைத் தந்துள்ளனர். இந்த மண்ணின் மகிமை உலகிற்கே தெரியும். அந்த மண் நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாக மிகப்பெரிய வாய்ப்பினைத் தந்துள்ளது.
எமக்கு எதிரானவர்கள் சொல்வது போன்று சுதந்திரக்கட்சி ஓர் சிங்களக் கட்சி அல்ல. இது ஓர் தேசியக் கட்சி. சர்வ இனங்கள், சர்வ மதங்களையும் ஒன்றுபடுத்திய கட்சி.
குறிப்பாக சிறுபான்மையினரின் தமிழர்களின் அபிலாசைகளையும் உள்வாங்கிக் கொண்டு சுதந்திரக்கட்சி நிலைத்து நிற்கிறது. அதுவே கடந்த தேர்தலில் யாழ் மக்கள் எனக்கு மிகப்பெரிய ஆணையை வழங்க காரணம்.
இந்த ஆணையை வழங்கிய மக்களுக்கு மிகப்பெரிய நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அந்த நன்றியை 18 மாத காலமாக செயல் வடிவில் ஆற்றிய வருகிறேன்.
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளராக பல பரினாமங்களைப் பெற்று 18 மாத காலத்திற்குள் யாழ் மாவட்டத்தில் 3,500க்கும் மேற்பட்ட வீட்டுத்திட்டங்கள், கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த 793 நிறைவான கிராமம் வேலைத்திட்டங்கள், 16சௌபாக்கியா உற்பத்திக் கிராம வேலைத்திட்டங்கள், 450கிராமிய வீதிகள் புனரமைப்பு அதனை விட மாகாணசபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதிகள் என பல அபிவிருத்திகளை நிறைவு செய்துள்ளோம். அதையும் தாண்டி வாழ்வாதாரம் இன்று மிகப்பெரிய சவாலாக உள்ளது. இன்னமும் யாழ் மாவட்டம் வறுமையில் எட்டாவது மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தை வறுமையில் இருந்து மீட்டெடுத்து பொருளாதார ரீதியாக முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். அதனூடாக இழந்த அனைத்தையும் மீளப் பெற்று எமது இலக்கினை அடைய முடியும்.என மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.