;
Athirady Tamil News

ஹர்ஷ டி சில்வா விடுத்துள்ள சவால் !!

0

உதவி வழங்கும் போது எந்தவொரு நாட்டுக்கும் சர்வதேச நாணய நிதியம் கட்டுப்பாடுகளை விதிக்காது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் எப்போதாவது அத்தகைய சட்டங்கள் அல்லது ஒழுங்குமுறைகளை விதித்துள்ளதா என்பதை நிரூபிக்குமாறு தற்போதைய நிர்வாகத்துக்கு சவால் விடுத்தார்.

நேற்று (21) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு பொதுமக்கள் உடன்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதாக அரசாங்கம் தெரிவித்தமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே மேற்குறிப்பிட்ட விடத்தை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கான காலம் முடிந்துவிட்டதால், அரசாங்கம் இனிமேல் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைச் சார்ந்திருக்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் நெருக்கடியானது எரிசக்தி நெருக்கடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்த அவர், அதன் மூலம் நாட்டின் வங்கி முறைமையின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

நாட்டின் நிதி நெருக்கடியானது கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்ட சில குழுக்கள் கூறுவது போன்று உள்நாட்டு செயற்பாட்டின் மூலமோ அல்லது வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தந்து ஹோட்டல் தங்குவதற்கு பணம் செலவழிப்பதன் மூலமோ இந்த நெருக்கடியை தீர்க்க முடியாது என்று குறிப்பிட்டார்.

தற்போதைய நிலைமை தொடருமானால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு கடன் வழங்க வேண்டாம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான செயல்முறை மற்றும் ஒட்டுமொத்த சீர்திருத்தத் திட்டம் உள்ளிட்ட தொடர்புடைய நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் அந்தந்த அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளுடன் மட்டுமே சர்வதேச நாணய நிதியம் உடன்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சாத்தியமான வாடிக்கையாளர்களால் சமர்ப்பிக்கப்படும் திட்ட முன்மொழிவுகளை வங்கிகள் எவ்வாறு ஒப்புக்கொள்கின்றன என்பதைப் போலவே இதுவும் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இதற்கு முன்னர் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்ற போது, ​​அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதாகக் குறிப்பிட்ட அவர், கைச்சாத்திட திட்டமிடப்பட்ட நாளில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக ஹர்ஷ எம்.பி மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.