மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கில் ஆயராக சட்டவாதிகளுக்கு அனுமதி!!
மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கில் ஆயராக சட்டவாதிகளுக்கு அனுமதி: ஊடகங்களும் சம்பவ இடத்தில் செய்தியை சேகரிக்கலாம்! வவுனியா மேல்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மன்னார் மனிதபுதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பாக சட்டத்தரணிகள் ஆயராவதற்கும், ஊடகங்கள் சம்பவ இடத்திற்கு சென்று செய்திகள் சேகரிப்பதற்கும் அனுமதி வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மன்னார், சதொச மனிதப்புதைகுழி விடயம் தொடர்பாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் அவர்களால் வவுனியா மேல்திமன்றில் மீளாய்வு மனு ஒன்று தாக்கல்செய்யப்பட்டது. அதன் தீர்ப்பு இன்று (22.02) வழங்கப்பட்டது. குறித்த தீர்பின் பின்னர் சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார், சதோச கட்டிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான வழக்கு 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கும் போது அந்த அந்த தொழில் விற்பனர்கள் அடங்கிய குழுவொன்று அதணை தோண்டி எடுத்து அதனைக ஆராட்சி செய்து வந்தது. அதனை மன்னார் நீதிமன்றம் மேற்பார்வை செய்து வந்தது. அதன் பின்னர், அதன் மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள ஒரு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அறிக்கையும் வெளிவந்து விடட்டது. அது வந்த உடனேயே இந்த நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரச சட்டவாதி இந்த நீதிமன்ற நடவடிக்கையில் எந்தவொரு சட்டத்தரணியும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜராக கூடாது என்ற வாத்தை முன்னெடுத்தார். அப்போது இருந்த மன்னார் நீதவான் கணேசராஜா அதனை ஏற்றுக் கொண்டு இந்த நீதிமன்ற நடவடிக்கைகளில் சட்டத்தரணிகள் ஆஜராக முடியாது என்ற உத்தரவினை ஏற்படுத்தினார்.
இதனை எதிர்த்து வவுனியாவில் உள்ள மாகாண மேல் நீதிமன்றில் மீளாய்வு வழக்கு தாக்கல் செய்தோம். அந்த வழக்கின் விசாரணை இன்று (22.02) முடிவுக்கு வந்தது. அதன் பிரகாரம் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட விவாதத்தில் எந்த ஒரு நீதிமன்றத்திலும் பாதிக்கப்பட்ட அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் தோன்றுவதற்கு எந்தவொரு சட்டத்தரணிக்கும் உரிமை இருக்கிறது. அதேபோல் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவோ அல்லது சட்டத்தரணிகள் மூலமாகவோ அந்த நடவடிக்கைகளில் பங்கு பற்றுவதற்கான உரிமை இருக்கிறது. இது எமது அரசியல் சாசனம் மூலமாகவும், வேறு சட்டங்கள் மூலமாகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உரிமை. அந்த உரிமையை எடுப்பதற்கு எந்த நீதிமன்றத்தாலும் முடியாது. அது செய்யப்படக் கூடாது. அது சட்டத்தை மீறிய செயல் என்ற வகையில் எங்களது வழக்கை முன்வைத்தோம்.
சட்டமா அதிபர் சார்பில் தோன்றிய அரச சட்டவாதி இது அந்த நடவடிக்கைகளை தொந்தரவு பண்ணும் வகையில் இருக்கின்றது. அதனால் சட்டத்தரணிகளையே அங்கு அனுமதிக்க கூடாது என்ற வாதத்தை முன் வைத்தார். இவ் வாதங்களை செவிமடுத்த மாகாண மேல் நீதிமன்ற நீதவான் பின்வருமாறு ஒரு உத்தரவையிட்டார். இலங்கையின் அரசியல் சாசனம், இலங்கையின் குற்றவியல் நடவடிக்கை கோவை, நீதி நடவடிக்கை கோவை, ஐ.சி.சி சட்டக் கோவை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு சட்டம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு சட்டத்தரணிகள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையிலும் பங்கேற்பதற்கு பாதிக்கப்பட்டவர் சார்பில் உரிமை இருக்கிறது. வழக்கு நடந்தாலோ அல்லது வழக்கு போடுவதற்கு முன்னரான நடவடிக்கையாவோ கூட அது இருக்கலாம் என்று உத்தரவிட்டு மன்னார் நீதிமன்ற நீதிவான் கணேசராஜா அவர்களினால் ஆக்கப்பட்ட உத்தரவினை தள்ளுபடி செய்தார்.
இது உண்மையில் நீதிமன்ற நடவடிக்கைளுக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும், சட்டத்தரணிகள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான பரிகாரத்தை தேடும் முயற்சிக்கும், இந்த தீர்ப்பு ஒரு மைல் கல்லாக தான் அமைந்திருக்கின்றது எனக் கூற வேண்டும்.
எந்தவொரு வழக்கிலும் இல்லாதவாறு இந்த புதைகுழி வழக்கில் பலவந்தமாக இறக்கப்பட்ட அந்த மக்களுடைய எலும்புக் கூடுகள் யாருடையது என அடையாளம் காண்பதற்கு சட்டத்தரணிகள் மட்டுமல்ல காணாமல் போனோர் அலுவலகம் கூட முன் வந்து இது தொடர்பாக பலவிதமான நடவடிக்கைகளை எடுத்து அதனை முன்னெடுத்துச் செல்லும் போது, ஒரு பிற்போக்குவாதமாக இந்த சட்டத்தின் நிலை தோன்றக் கூடாது என்ற வாதத்தை முன்வைத்து அதற்கான ஒரு உத்தரவை பெற்றுக் கொண்டதன் மூலம், சட்டத்தின் ஆட்சிக்கே உலை வைத்த விடயமாக இருந்த கட்டளை வவுனியா மேல் நீதிமன்றில் வறிதாக்கப்பட்டு எந்த சட்ட நடவடிக்கையிலும், நீதிமன்ற நடவடிக்கையிலும் சட்டத்தரணிகள் மூலமாக தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், நிலை நாட்டிக் கொள்வதற்கும் எந்த மக்களுக்கும் உரிமை உண்டு என்பதை இந்த தீர்ப்பு எடுத்தியம்புகின்றது.
அத்துடன், இந்த தீர்பில் வேறு பல அம்சங்களும் சொல்லபப்பட்டது. காணாமல் போனோர் அல்லது பாததிக்கப்பட்டோர் சார்பில் சட்டத்தரணி தோன்றுவதற்கு மன்று உத்தரவிட்டிருக்கின்றது. அதே சமயத்தில் காணாமல் போனோர் அலுவலகமும் இந்த வழக்கில் இடையீடு செய்வதற்கும், தோன்றுவதற்கும் இந்த உத்தரவு வழி சமைக்கிறது. குறித்த வழக்கில் மன்னார் நீதிமன்ற நீதவான் அவர்களின் அணுசரணையிலும், அவர்களுடைய மேற்பார்வையிலும் நீதிமன்ற நடவடிக்கைகள், புதைகுழி தோண்டும் நடவடிக்கைகள், புதைகுழி ஆராட்சி நடவடிக்கைகள் எல்லாம் மன்னார் நீதவானின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும் எனவும் மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காணாமல் போனோர் சார்பிலும், பாதிக்கப்பட்டவர் சார்பிலும், அவர்களை பிரதிநிதிப்படுத்தும் 10 நபர்கள் நடவடிக்கை எடுக்கும் போது அங்கு பிரச்சன்னமாகி இருப்பதற்கும், அதனை அவதானிப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் அந்த நடவடிக்கைகளுக்கு எந்தவித குந்தகமும் இல்லாது 30 மீற்றர் தூரத்தில் நின்று அதனை கண்காணிக்க மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், மிக முக்கியமாக ஊடகவியலாளர்கள் அந்த நடவடிக்கைகள் இடம்பெறும் போது ஒவ்வொரு மணித்தியலத்திற்க்கும் 10 நிமிடங்கள் அந்த நடவடிக்கைகளை அவதானிப்பதற்கும், அது சம்மந்தமான செய்திகளை அறிக்கையிடுவதற்கும் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இது மிகவும் முக்கியமான விடயம்.. புதைகுழி விடயம் மிக தெளிவான வெளிப்படை தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
இந்த நடவடிக்கை 2018 ஆம் ஆண்டு தொடங்கும் போது ஊடகவியலாளர்கள் மடடுமன்றி பொது மக்கள் கூட தூரத்தில் நின்று பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் என்ன நோக்கத்திற்காகவோ அந்த உரிமை மறுக்கப்பட்டு ஊடகவியலாளர்கள், பொது மக்கள் பார்வையிட முடியாது என மிகவும் வலுக்கட்டாயமாக இந்த நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்த வைத்திய அதிகாரி அத்தகைய உத்தரவைப் போட்டு ஊடகவியலாளரையும், பொது மக்களையும் அப்புறப்படுத்தினார். எனவே இத்தகைய ஒரு வழக்கின் மூலம் ஊடகவியலாளர்கள் தங்களது கடமைகளை செய்வதற்கும், இது தொடாடபான செய்திகளை வெளியுலகிற்கு கொண்டு வருவதற்கும் சாதகமான ஒரு விடயமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. கருத்தை உண்டாக்குவதற்கு செய்திகள் தேவை. செய்திகள் எங்கிருந்து வர வேண்டும் என்று அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த செய்திகள் தான் போட வேண்டும் என அரசாங்கமோ அல்லது வேறு எவருமோ எந்த கட்டளைகளையும் போட முடியாது. எனவே இலங்கை அரசியல் யாப்பினால் வழங்கப்பட்ட ஊடக சுதந்திரம் மற்றும் செய்தி சுதந்திரம், செய்திகளை அறியும் சுதந்திரம் என்பன இந்த உத்தரவின் மூலம் பாதுக்கப்கப்பட்டுள்ளது. இது ஒரு முன்போக்கான ஒரு தீர்ப்பாக அமைந்துள்ளது. இது அனைத்து விடயங்களுக்கும் பொருத்தமானதாகவும் அமையும்.
அத்துடன் இது தொடர்பாக எதாவது விண்ணப்பங்கள் செய்யவேண்டும் என்றால் அதனை மன்னார் நீதிவானுக்கு நேரடியாக சமர்பிக்கவேண்டும் என்றும், உத்தரவு வழங்கபட்டுள்ளது. அகழ்வுப்பணி் தொடர்பாக மன்னார் நீதவானின் கட்டளையே இறுதியானதாகும். அத்துடன் நிதவானின் நேரடி கண்காணிப்பில் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்கள் சார்பான சட்டத்தரணிகள், சட்டமா அதிபர் திணைக்களம், மருத்துவ நிபுணர்கள், தொல்பொருள் திணைக்களம் ஆகியோர் இணைந்து கலந்துரையாடி எடுக்கும் முடிவு நீதவானால் அங்கீகரிக்கப்பட்டு அவரது நேரடி கண்காணிப்பில் அனைத்தும் இடம்பெறவேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாங்கள் ஒரு விடயத்தை மாத்திரம் முன்வைத்தே இந்த மீளாய்வு மனுவை செய்திருந்தோம். எனினும் இந்த தீர்ப்பின் மூலமாக ஜனநாயகத்திற்கும் மக்கள் ஆட்சிக்கும் சாதகமான பல விடயங்கள் வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது. எனவே இன்றையதினம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மேல்நீதிமன்றம் சிறப்பான ஒரு தீர்வினை அளித்திருக்கின்றது. இது மக்களின் உரிமைகளை மீண்டும் நிலைநாட்டும் என்று மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கின்றேன்.
இதேவேளை, மன்னார் நீதவானின் தீர்ப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நாடகமாடுகின்றார்கள். இது ஒரு கற்பனாவாதிகளின் கற்பனை என்ற ரீதியில் அந்த உத்தரவு அமைந்திருந்தது. அதனை கண்ணுற்ற மேல்நீதிமன்ற நீதிபதி எந்த ஒரு நீதிமன்றத்தாலும் பாவிக்ககூடாத ஒரு வார்த்தைகள் அல்லது மொழி என்று அதனை விமர்ச்சித்திருந்தார் என்பதனையும் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கின்றேன் என்றார்.
இதேவேளை, வவுனியா மேல்நிதிமன்ற நீதிபதியாக கடமையாற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறித்த உத்தரவுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.