’மின் வெட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்லாம்’ !!
நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் வெவ்வேறான நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி, மின் துண்டிப்புகளால் உயர் தரப் பரீட்சை மாணவர்களுக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (23) அமர்வில் கலந்துகொண்டு வாய்மூல விடைக்கான வினாவை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி முறைக்கு அமைய, நாட்டில் ஏற்பட்டுள்ள மின் துண்டிப்பு காரணமாக உயர் தரப் பரீட்சை மாணவர்களுக்குப் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்றார்.
நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் வெவ்வேறான நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றன. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார தடைகளை எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் அரசாங்கம் தடுத்து நிறுத்து வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு என்பனவற்றுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. முடிந்தளவு இந்நிலைமையை மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.