இராணுவமும் யுத்த குற்றம் செய்திருக்கலாம் !!
யுத்தக் குற்றத்தில் இராணுவ வீரர்கள் சிலர் ஈடுபட்டிருக்கலாமென தனக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, யுத்தக் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு தேசிய மட்டத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான நேற்றைய (23) விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான திட்டங்களும் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை எனவும் முதலில் யுத்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து எமது இராணுவ வீரர்களை மீட்க வேண்டும் என குறிப்பிட்டார்.
முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அச்சப்படாமல் அதற்கு முகங்கொடுக்க வேண்டும். யுத்தக் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட எவராவது இருந்தால் அவருக்கு தேசிய மட்டத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் இராணுவ நீதிமன்றத்தின் முன் அவ்வாறானவரை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுக்காமல் இருப்பதால், சட்டமுறைமைகளை பின்பற்றி யுத்தத்தை முன்னெடுத்தவர்களும் பல குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பது கவலைக்குரியது என்றார்.
நாட்டில் மனித உரிமை மீறல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டிய பொன்சேகா, “நாம் மிச்சல் பட்லெட்டுக்கு பயப்படவில்லை. அவர் ஆயிரக்கணக்கானோரிடம் இராணுவத்துக்கு எதிராக சாட்சியங்களை பெற்றுள்ளார். இவருக்கு சாட்சிகளை வழங்கிய நூற்றுக்கு 99 சதவீதமானவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள்” எனவும் கூறினார்.
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழர்களை தங்களது உணவு, மருந்து பொருள்களை வழங்கி இராணுவத்தினரே மீட்டார்கள் என்பது மிச்சல் பட்லெட்டுக்கு தெரியாது என்றார்.
தமிழ் மக்களை இனவழிப்பு செய்ததாக் கூறப்படுவதில் எந்தவிதமான உண்மையும். யுத்ததை நிறைவு செய்த இராணுவத் தளபதிக்கு, ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட அதிகளவான வாக்குகளை தமிழ் மக்கள் வழங்கியிருந்தார்கள். இராணுவ வீரர்கள் தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாக தமிழர்கள் நினைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
சர்வதேச சட்டங்களுக்கு அமையவே இராணுவம் யுத்தத்தில் ஈடுபட்டது. எனினும் யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் சிலர் தவறிழைத்திருக்கலாம் என எனக்கும் அப்போது சந்தேகம் இருந்தது. அவர்கள் தொடர்பில் ஆராய முடியும் எனவும் தெரிவித்தார்.
மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட்டுக்கு சில விடயங்களை நான் கூற வேண்டும். “புலிகள் ஒரு கொடுரூமான பயங்கரவாத அமைப்பு. அவர்கள் அப்பாவி மக்களை கொன்றனர். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களையும் கொன்றனர். இந்தியாவின் பிரதமரையும் கொன்றனர். தற்கொலை தாக்குதல்தாரிகளைக் கொண்டு அரசியல்வாதிகளை அவர்கள் கொன்றனர். தமிழ் தலைவர்களையும் கொன்றனர். மத வணக்கப்பாட்டு தளங்கள், பொருளாதார நிலையங்களையும் தாக்கியளித்தனர்“ என்றார்.
மேலும் புலிகளுக்கு ஆதரவானவர்களின் கருத்துகள் மாத்திரமே கேட்டறியப்படுகிறது. மிச்சல் பச்லெட்டு எங்களுக்கும் நியாயத்தை வழங்க வேண்டும் எனவும் கூறினார்.