கார் மீது ஏறிய ரஷிய ராணுவ டாங்கி- வலைதளத்தில் பரவிய புகைப்படத்தால் பரபரப்பு…!!
உக்ரைன் நாடு மீது ரஷிய ராணுவம் மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது.
உக்ரைன் அதிபர் மாளிகையை கைப்பற்ற தலைநகர் கிவ் நோக்கி ராணுவத்தின் டாங்கிகள் நகர்ந்து வருகிறது. அவை விளை நிலங்கள் வழியாக செல்வதால் பயிர்கள் அனைத்தும் நாசமாகி விட்டதாக உக்ரைன் மக்கள் தெரிவித்தனர். இதற்கிடையே ரஷிய போர் விமானங்கள் வீசிய ராக்கெட் குண்டுகளால் பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி விட்டது.
இதற்கிடையே உக்ரைனின் ஒபலோனின் நகர் பகுதிக்குள் நுழைந்த ராணுவ டாங்கிகள் அங்கிருந்த சாலைகள் வழியாக அரசு கட்டிடங்களை கைப்பற்றி வருகிறது. இதற்காக புறப்பட்ட டாங்கிகள் சாலையில் செல்லும் பொதுமக்களின் வாகனங்களையும் மோதி தள்ளுவதாக புகார் எழுந்தது.
இதனை உறுதிப்படுத்துவது போல உக்ரைனின் ஒபலோனுக்குள் புகுந்த ரஷிய ராணுவ டாங்கி ஒன்று சாலையில் சென்ற கார் மீது ஏறி இறங்கும் காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.
ரஷிய ராணுவ டாங்கி, காரை மோதி தள்ளி சுக்குநூறாக உடைக்கும் காட்சிகளை அல் ஜசீரா என்ற அமைப்பு சமூக வலைதளத்தில் பதிவிட்டது.
இந்த வீடியோ சில மணி நேரத்தில் வைரலாகி உலகம் முழுவதும் பரவியது. இந்த காட்சியை பார்த்த சர்வதேச அமைப்புகள் இதற்கு பலத்த கண்டனம் தெரிவித்தனர். ரஷியாவின் செயலுக்கு கண்டனமும் தெரிவித்தனர்.