தலைநகர் தீ பற்றி எரிகிறது: நான்கு திசைகளில் இருந்தும் ரஷிய படைகள் தாக்குதல்…!!
உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ படையில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷியா, போரை தொடங்கியது.
முதல் நாளில் ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. உக்ரைனில் உள்ள ராணுவ தளவாடங்களை குறிவைத்து இந்த ஆக்ரோஷ தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உக்ரைன்- ரஷிய எல்லை, பெலாரஸ் நாடு, கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றில் இருந்து ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.
2-வது நாளில் தலைநகர் கீவ்வை நோக்கி ரஷிய வீரர்கள் முன்னேறினர். அந்த நகரை சுற்றிவளைக்க ராணுவ டேங்கிகள் மூலம் முன்னேறி சென்றனர். குறிப்பாக பெலாரஸ் நாட்டின் எல்லையில் இருந்து உக்ரைனுக்குள் ரஷிய படை புகுந்தது. அதே போல் மற்ற நகரங்களிலும் ரஷிய படைகள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டன.
உக்ரைன் மீது ரஷியா ஆக்ரோஷ தாக்குதல் நடத்துவதால் மக்கள் மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். பலர் உயிர் தப்பிக்க உக்ரைனில் இருந்து வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் அண்டை நாடுகளின் எல்லையை நோக்கி செல்கிறார்கள். அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த படியே இருக்கிறது.
இதுவரை உக்ரைனில் இருந்து 1.20 லட்சம் பேர் அகதிகளாக போலந்து, ருமேனியா, அங்கேரி, மால்டோவா, சுலோவாகியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளனர் என்று ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. சண்டை மேலும் வலுவடைந்தால் 40 லட்சம் பேர் வரை நாட்டை விட்டு வெளியேறக் கூடும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
தலைநகர் கீவ்வில் சண்டை நடந்து வருவதால் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஊரடங்கு நேரம் இரவு 10 மணியில் இருந்து காலை 7 மணி வரை இருந்த நிலையில் இன்று மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையாக அது அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரும் பொது மக்கள் எதிரிகளின் நாசவேலை மற்றும் உளவு பிரிவை சேர்ந்தவர்களாக கருதப்படுவார்கள் என்று நகர மேயர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கி வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘நாங்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம். எங்கள் நாட்டை காப்போம். நான் தொடர்ந்து இங்குதான் இருப்பேன். நாட்டை விட்டு வெளியேற மாட்டேன்’’ என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது, ‘‘தலைநகரை உக்ரைன் ராணுவத்தினர் காக்க போரிட்டு வருகிறார்கள். தலைநகர் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இன்னமும் இருக்கிறது. எதிரிகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன’’ என்று தெரிவித்தார்.
ரஷிய படையின் அதிரடி தாக்குதலால் தலைநகர் கீவ் விரைவில் வீழும் என்று கருதப்பட்ட நிலையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் கடுமையாக எதிர்த்து போரிட்டனர். இதனால் ரஷிய படை கடும் சவாலை சந்தித்தது. நேற்று 3-வது நாளில் ரஷிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து நீடித்தது.
தீப்பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு
ரஷிய ராணுவத்தின் பிரதான படைப்பிரிவு கீவ் நகருக்குள் செல்ல வழி ஏற்படுத்தும் வகையில் சிறிய படைக்குழு அந்நகருக்குள் நுழைய முயற்சித்ததாகவும், அதை தாங்கள் முறியடித்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் கீவ்வில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ள வானிஸ் கீவ் நகரத்தில் ஒரு விமான தளத்தை கைப்பற்றும் முயற்சியில் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் கீவ் நகரில் உள்ள அணையை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கீவ்வுக்குள் புகுந்துள்ள ரஷிய ராணுவ வீரர்களுடன் உக்ரைன் வீரர்கள் தெருக்களில் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அங்குள்ள குடியிருப்புகள் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டன. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
அதேவேளையில் தலை நகர் கீவ் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘உக்ரைனுக்குள் தற்போது 50 சதவீத ரஷிய ராணுவத்தினர் படையெடுத்துள்ளனர். ஆனால் அவர்களின் படையெடுப்பு செயல்பாடு மெதுவாக இருக்கிறது. ஏனென்றால் உக்ரைன் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்’’ என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் இன்று 4-வது நாளாக உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கீவ் நகரை பிடிக்க ரஷிய படையினர் தீவிரமாக உள்ளனர். இந்தநிலையில் உக்ரைன் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் நடத்த ரஷிய ராணுவத்தினருக்கு அதிபர் புதின் திடீரென்று நள்ளிரவு உத்தரவிட்டுள்ளார்.
தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷியாவின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக உக்ரைன் அறிவித்துள்ள நிலையிலும் ரஷியா விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்த நிலையிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. உக்ரைனின் அனைத்து நகரங்களுக்குள்ளும் நுழையும் வகையில் எல்லா திசைகளில் இருந்தும் ராணுவத்தை விரிவுபடுத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
இது குறித்து ரஷிய ராணுவ தரப்பில் கூறும் போது, ‘‘உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் அழைப்பு விடுத்தோம். உயர்மட்ட கமிட்டிகளை அனுப்பவும் தயாராக இருந்தோம். ஆனால் உக்ரைன் அதை ஏற்கவில்லை. இனி பேச்சு வார்த்தை நடத்தப்பட மாட்டாது. உக்ரைனை அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்கப் போகிறோம்’’ என்று தெரிவித்தது.
தாக்குதலை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டதை அடுத்து நள்ளிரவு ரஷிய ராணுவத்தின் தாக்குதல் பல மடங்கு அதிகரித்தது. நான்கு திசைகளில் இருந்தும் ஏவுகணைகள் வீசப்பட்டன. ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரின் வாசில்கீவ் பகுதியில் உள்ள எண்ணை கிடங்கு வெடித்து சிதறியது. அந்த எண்ணை கிடங்கில் இருந்து தீப்பிழம்பு பல அடி உயரத்திற்கு எழும்பியது. எண்ணைக் கிடங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அந்நகர மேயர் நடாலியா பலசினோவிச் உறுதிபடுத்தி உள்ளார். தாக்குதல் வீடியோவும் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இதேபோல் உக்ரைன் வடகிழக்கு நகரமான கார்கீவில் உள்ள எரிவாயு குழாய் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் கடும் சேதம் ஏற்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் அலுவலகம் கூறும்போது, ‘‘ரஷிய படைகள் உக்ரைன் நாட்டின் 2-வது பெரிய நகரமான கார்கீவில் எரிவாயு குழாயை வெடிக்க செய்துள்ளனர். கடுமையான புகை மூட்டம் வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ளது. இது ஒரு சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தக் கூடும். இதனால் மக்கள் தங்கள் வீட்டு ஜன்னல்களை ஈரமான துணியால் மூடிவைக்க வேண்டும். நிறைய திரவங்களை குடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
ரஷியா தற்போது உக்ரைனில் எரிவாயு மற்றும் எண்ணை உள் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கி வருகிறது. இதனால் தலைநகர் கீவ்உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தீப்பற்றி எரிகின்றன.
ரஷிய ராணுவம் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் மட்டுமே கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. மற்ற பகுதிகளில் பெரிய தாக்குதல்களை நடத்தாமல் விமானங்களின் மூலம் குண்டுகளை வீசியது. தற்போது அனைத்து முனைகளில் இருந்தும் தாக்குதலை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு இருப்பதால் இன்று முதல் உக்ரைனில் நடக்கும் போர் உச்சக் கட்டத்திற்கு செல்லும் என்ற பீதி நிலவி வருகிறது.
இதன் மூலம் தலைநகர் கீவ் உள்பட உக்ரைன் நாட்டின் அனைத்து பகுதிகளையும் ரஷிய ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கும். ஏற்கனவே உக்ரைனின் தெற்கு நகரமான மெலிடோபோல் தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.