உக்ரேன் போருக்கு மத்தியிலும் இலங்கை மீதான கவனம் குறையவில்லை !!
உக்ரேனில் கடுமையான போர் நடந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்திலும் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஐ.நா.மனித உரிமை பேரவையின் கவனம் சற்றும் குறையாமல் தொடர்ந்தும் இருக்கின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
உடுப்பிட்டியில் இடம்பெற்ற பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 10 வருடங்களை மீளத்திரும்பிப் பார்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கை மீதான மனித உரிமைகள் பேரவையின் கரிசனை குறையவில்லை. தொடர்ச்சியாக அந்த அழுத்தம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.
இந்தத் தடவையும் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் இடம் பெறவுள்ள சில நாட்களுக்கு முன்னதாக ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் மிக மோசமான போர் நடந்து கொண்டிருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் இதனைக் கவனிக்கவேண்டியது அனைவரின் கடப்பாடு ஆகும். ஆனால் அப்படியான சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழர் விவகாரம் கவனிப்பாரற்றுப் போய்விடுமோ என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் இந்தத் தடவையும் மிகக்கடுமையான அறிக்கை ஐ.நா உயர் ஸ்தானிகரிடத்திலிருந்து வந்திருக்கின்றது. எதிர்வரும் 3ஆம் திகதி இது தொடர்பான கலந்துரையாடல் ஐ.நா.மனித உரிமைப்பேரவையில் இடம்பெறவுள்ளது. ஆகையால் உக்ரேனில் கடுமையான போர் நடந்துகொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்திலும் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற ஐ.நா.மனித உரிமை பேரவையின் கவனம் சற்றும் குறையாமல் தொடர்ந்தும் இருக்கின்றது.
இது சிறந்த விடயம் நாங்கள் அனைவரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் யுத்தத்தின் கொடூரம் அறிந்த வகையில் உக்ரேனில் இடம் பெறுகின்ற போர் முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம். எல்லா நாடுகளும் விடுக்கின்ற கோரிக்கையாக இருந்தாலும் கூட, 12 வருடங்களுக்குப் பிறகும் யுத்தக் கொடுமையை அதன் பாதிப்பை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற மக்கள் என்ற வகையில் உலக தரப்பில் ரஷ்யாவிடமும் இந்தப் போரை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கையை முன்வைக்கின்றோம் என்றார்.