’கோதுமை மா அரசியல் செய்கிறார் கோட்டா’ !!
ஜனாதிபதியின் தேர்தல் கொள்கையில் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்று கொடுப்பதாக உறுதியளித்த போதும் அது நடைமுறையில் இல்லை என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா, கோதுமை மாவை பக்கெட்டில் அடைத்து கோதுமை மா கொடுக்கின்ற அரசியலைத்தான் ஜனாதிபதி கோட்டபாய செய்கின்றார் என்று தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்புக்கு நியாயம் கோரி கிழக்கு முதல் மேற்கு வரையான கையெழுத்து இயக்கம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஈரோஸ் ஜனநாயக முன்னணின் ஏற்பாட்டில் நேற்று (01) இடம்பெற்றது.
கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துவைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்ததுடன், அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“மலையக மக்களின் உரிமைக்கான கையெழுத்து கோரிக்கையினை செய்துவருகின்றோம். குறிப்பாக மலையக சமூகம் என்பது ஒடுக்கப்பட்ட சமூகம். ஆனால் எவ்வாறு எல்லாம் ஒடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உலகுக்கு பல தடவைகள் தெரிவித்து வந்தோம்.
அந்த ஒடுக்கு முறையின் அடையாளங்களில் ஒன்றாக 1948 குடியுரிமை பறிக்கப்பட்ட இந்த மக்கள் அர்த்தமுள்ள குடிமக்களாக இன்னும் மாற்றப்படவில்லை அதற்கான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.
அவ்வாறு போராடி பெற்றுக் கொள்ளுகின்ற அதிகாரங்களைகூட வழங்குவதற்கு மறுக்கின்ற அரச பொறிமுறை நடவடிக்கையின் ஒன்றாக இப்போது எழுந்துள்ள பிரச்சனைக்காக சகோதர மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காகன கோரிக்கையாக இந்த கையொழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளோம்.
நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை சனத்தொகைக்கு போதுமான எண்ணிக்கைக்கு இல்லை. இதனால் பெரும்பாலும் நுவரெலியா மலையக தமிழ் மக்கள் இத்தகைய நிர்வாக அதிகார பகிர்வு உரிமைகள் இல்லாது மிக நீண்டகாலமாக தவித்துவருகின்றனர்.
குறிப்பாக அந்த மாவட்டதின் கீழ் வருகின்ற அம்பகமுவ, நுவரெலியா ஆகிய பிரதேச செயலகங்கள் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட சனத் தொகையை கொண்டவை அந்த இரண்டு பிரதேச செயலகங்களில் 90 சதவீதமான மலையக தமிழர்களே வாழுகின்றனர்.
2021 இந்த நாட்டிலே பாரிய பாரபட்சம் நடந்திருக்கின்றது அதுதான் காலி மாவட்டத்துக்கு புதிதாக அனுமதிக்ப்பட்ட 3 பிரதேச செயலகங்களும் உருவாக்கப்பட்டு முழு அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அதே வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நுவரெலியா மாவட்டத்துக்கான 5 பிரதேச செயலகங்கள் மறுக்கப்பட்டுள்ளது மாத்திரம் அல்லாது நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலகங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இது ஒட்டு மொத்தமாக இந்த மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி எனவே நாட்டிலே பாரபட்சமாக நீதி கையாளப்படுகின்றது என்பதற்கான ஒரு சான்று இது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிற்பதை பார்த்தோம் அந்த வரிசை இந்த ஆட்சி எந்தளவுக்கு மோசமான ஆட்சியாக இருக்கின்றது இரவு பகலாக மக்களை வரிசையில் நிற்கவைக்கின்ற ஆட்சியாக மாறியிருக்கின்றது
இந்த நாட்டில் பஞ்சத்தை உருவாக்குவதற்கான அடிப்படையான ஆட்சியாக இருக்கின்றது. எந்த 69 இலட்சம் மக்கள் வாக்களித்தார்களோ, அவர்களின் வாக்குகள் இன்று பொய்த்துபோயுள்ளது என்பது அவர்கள் வரிசையில் நிற்கும் போது அவர்கள் உணர்த்துகிறார்கள்” என்றார்.