உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை- புதின் உறுதி…!!
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் சென்றுள்ளது.
தலைநகர் கீவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக உள்ளன. அந்நகரங்களில் தாக்குதல் கடுமையாக இருந்து வருகிறது. ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கீவ், கார்கிவ் நகருக்குள் ரஷிய படையினர் புகுந்து சண்டையிட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவமும் கடுமையாக போராடி வருகிறது. விரைவில் கீவ் நகருக்குள் விரைவில் பெருமளவில் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பீதி நிலவுகிறது.
தாக்குதலை நிறுத்தும்படி உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக ஐ.நா. சபையிடமும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டு மக்களும் போரை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும்படி உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், துருக்கி அதிபர் எர்டோகன் ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைன் நிலவரம் குறித்து எடுத்துரைத்த எர்டோகன், உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த புதின், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்திவிட்டு ஆயுதங்களை கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என்றார்.
உக்ரைன்-ரஷியா போர் பதற்றத்துக்கு மத்தியில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன், நட்பு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று மால்டோவாவில் முகாமிட்டுள்ளார். அங்கு பேசிய அவர், அமெரிக்கா தனது போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்காக, போலந்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும், இதுகுறித்து அமெரிக்கா தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். ஆனால், எப்போது ஒப்பந்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கவில்லை.